Published : 18 Mar 2022 12:13 PM
Last Updated : 18 Mar 2022 12:13 PM

தமிழக பட்ஜெட் 2022-23: 'முதல்வரின் முகவரி' தொடங்கி தமிழ் வளர்ச்சி வரை - அறிய வேண்டிய 25 அம்சங்கள்

சென்னை: தமிழக பட்ஜெட் 2022-23 அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ’முதல்வரின் முகவரி’ தொடங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு வரை அறிய வேண்டிய 25 அறிவிப்புகள் பற்றிய தொகுப்பு:

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து - மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு. இந்தத் திருக்குறளைக் கூறி தமிழக பட்ஜெட் 2022-23 ஐ நிதியமைச்சர் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் இருந்து:

1) கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை நான் தாக்கல் செய்தபோது பல்வேறு புதிய திட்டங்கள், அறிவிப்புகள், சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தமனநிறைவுடன் நான் எனது இரண்டாவது வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை இந்த அவையின் முன்வைக்கின்றேன். தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, நான் எனது முன்னோர்களையும், அரசியல் ஆசான்களையும், எனக்கு முன்னர் இந்தப் பொறுப்பை வகித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களையும் வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த சேவை ஆகியவற்றின் காரணமாகவே இன்று இம்மாமன்றத்தில் நான் உரையாற்றிக் கொண்டிருக்கிறேன்.

2) என்னுடைய பொதுவாழ்வில் என்றென்றும் எனக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து, கலங்கரை விளக்கமாகத் திகழும் முதலமைச்சர் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை நாங்கள் நிதி மேலாண்மையில் அடைந்துள்ள சாதனைகள் அனைத்துமே அவரது வழிகாட்டுதலாலும்,

முழு ஆதரவினாலும் மட்டுமே எய்தப்பட்டவையாகும். இந்த வரவு-செலவுத் திட்டத்தைத் தொடங்கும்போது, “இன்றைய சூழல்களை மட்டும் கருத்திற்கொள்ளாமல் தமிழ்நாட்டின் வருங்கால சந்ததியினரின் நலத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்க வேண்டும்” என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதை மனத்தில் கொண்டு இந்த வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

3) கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்தனர். கோவிட் பெருந்தொற்றின் முதல் அலை பரவலைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வீரியத்துடன் இரண்டாம் அலை பரவியிருந்த நேரத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றோம். அத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற முதல் நாளிலேயே ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு தொலைநோக்குத் திட்டத்தையும் வகுத்துள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு, வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.இவை மட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற வரவு-செலவுத் திட்ட சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

4) பதவியேற்ற நாளிலிருந்து இந்த அரசு கோவிட் பெருந்தொற்று, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை சந்திக்க நேர்ந்தது. 2015 ஆம் ஆண்டில் பெய்த மழையால் சென்னை பெரும் பாதிப்புக்குள்ளானது. அதைக்காட்டிலும் 2021 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பல பகுதிகளில் மிக அதிகமான மழைப்பொழிவு நிகழ்ந்தது. இருப்பினும், முதலமைச்சர் அவர்களின் நேரடி நடவடிக்கைகளாலும், கள ஆய்வுகளாலும், இழப்புகளும் இறப்புகளும் கட்டுப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலையை (ஒமிக்ரான்) தமிழ்நாடு சந்தித்தது. இந்த அரசால் இரண்டாம் அலையின் போது ஏற்படுத்தப்பட்ட கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளும், கற்றுக்கொண்ட அனுபவத்தின் பயனாலும் மூன்றாவது அலை மிகச்சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், இந்த எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்த மாநில நிதிநிலையில் மேலும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.

5) எதிர்பாராமல் பெருமளவில் செலவினங்கள் ஏற்பட்ட போதிலும், சிறந்த நிதி நிருவாகத்தையும் நிதி மேலாண்மையையும்அரசு கடைப்பிடித்தது.இதன் பயனாக, மொத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வெறும் ஒரு சதவீதம் உயர்வினையே முதல் துணைநிலை மதிப்பீடுகளில் கோரினோம்.

6) 2014 ஆம் ஆண்டு முதல்,வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு, 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும் இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது. இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது.

7) இந்த உறுதியான நடவடிக்கைகளின் அடித்தளமாக இருப்பவர் திராவிட மாதிரி வளர்ச்சியின் (Dravidian Model) இலக்கணமாகத்திகழ்பவர் முதலமைச்சர் அவர்களே. அவரின் ஒவ்வொரு சிந்தனையிலும், செயலிலும், சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிடக் கொள்கைகள் நிறைந்திருக்கின்றன. திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளே இந்த அரசின் ஆணிவேராகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிந்தனைகளும், செயல்களும்,

எழுத்துக்களும் இந்த அரசை சிறப்பாக வழிநடத்தி வருகின்றன. திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகள் பல புரிந்த போதிலும், இப்போராட்டத்தில் நாம் இன்னும் முழுமையாக வெற்றி அடையவில்லை. எனவே, அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நமது கொள்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக இருப்போம்.

8) அண்மையில், தாமிரபரணி படுகையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள், பண்டைத் தமிழ் நாகரிகத்தின் தொன்மை, குறைந்தது 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என வெளிப்படுத்தியுள்ளன. உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் நமது தமிழர் நாகரிகமும் ஒன்று என்பதை இது உறுதி செய்துள்ளது. முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு, தமிழ்ச் சமுதாயத்தின் நீண்ட நெடிய பண்பாட்டின் வழித்தோன்றல் என்றே தன்னைக் கருதுகிறது. நம் நாட்டின் பன்முகப் பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயலும் இவ்வேளையில், தமிழ்ச் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்.

9) மத்திய-மாநில நிதி உறவுகள், தரவு அடிப்படையிலான ஆளுகை (Data Centric Governance), அரசு உடைமைகள் மற்றும் இடர் மேலாண்மை (Asset &Risk Management), அதிக பொறுப்புடைமை மற்றும் உற்பத்தித்திறன் (Increased Accountability and Productivity), சட்டமன்றத்தின் பங்கினை வலுப்படுத்துதல் ஆகிய ஐந்து முக்கிய முன்னெடுப்புகளை, இந்த அரசு நிருவாகத் திறனை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் என்று கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த ஒவ்வொரு முன்னெடுப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மத்திய-மாநில நிதி உறவுகளை ஆய்வு செய்ய சிறப்பு ஆலோசனைக் குழு அமைத்தல், தரவுத் தூய்மை (data purity) திட்டச் செயலாக்கம், மாநிலத்தின் உள்தணிக்கை அமைப்புகளை சீரமைத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

10) அண்மையில் நடைபெற்ற நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது முதலமைச்சர் அவர்களின் செயல்பாட்டையும் தலைமைப் பண்பையும் மக்கள் எந்த அளவிற்கு அங்கீகரித்துள்ளனர் என்பதையும் தமிழ்ச் சமுதாயம் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது. இது எங்களின் உழைப்பை பன்மடங்கு அதிகரிக்க ஊக்கமளிக்கிறது.

11) இந்தியா மாநிலங்களின் மத்தியம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். நமது அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு இணக்கமான உறவை வடிவமைத்தனர். நமது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகள் வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றன. மாநிலங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மாநிலங்களின் உரிமைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும்.

12) வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான,பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம்.தற்போது உக்ரைனில் நடைபெற்றும் வரும் போரின் காரணமாக உலகளாவிய பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இதனால் நுகர்வு தேவையில் வீழ்ச்சியும் (demand shocks), உலகளாவிய அளிப்பிலுள்ள பாதிப்புகளும் (global supply disruptions), மாநிலப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். பணவீக்கம், வட்டி வீதம் ஆகியவை அதிகரிக்குமென பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், கோவிட் பெருந்தொற்றின் தாக்கமும் முற்றிலுமாக நீங்கிவிட்டது என்று தற்போது கூற இயலாது. இது மட்டுமின்றி,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முழு இழப்பை அரசு ஏற்பதன் விளைவையும், அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் முழு தாக்கத்தையும், கடன் தள்ளுபடியின் தாக்கத்தையும் வரும் நிதியாண்டில் இந்த அரசு சந்திக்க நேரிடும்.

13) இத்தகைய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நிதி முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது அரசியல் முன்னோர்களான நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே, சமூகநீதிக்கான அளவுகோல் திராவிட இயக்கத்திற்கான அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன. பொருளாதாரப் பார்வையில் சமூகநலனுக்கும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த ஆண்டில் பெருந்தொற்றின் காரணமாக சமூகத்தில் நலிந்த பிரிவினர்களின் துயர் துடைப்பதை குறிக்கோளாகக் கொண்டு நாம் பணியாற்றினோம். தற்போது, நமது பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்று வர, சமூகநலத் திட்டங்களில் எவ்விதக் குறையுமின்றி, நமது முன்னுரிமைகளை மறுபரிசீலித்து சமூகக் கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

14) மேற்கூறிய அணுகுமுறையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய நிதி வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில்சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்யும் விதமாக இந்த வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டம் பின்வரும் பொருண்மைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தும்:

· வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளின் வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்.

· சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல்

· பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை பெறும் திறனை அதிகரித்தல்

· புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் தற்போதிருக்கும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் வாயிலாகவும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

· கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் மகளிரின் முன்னேற்றம்.

· விளிம்பு நிலையில் உள்ளோரின் சமூக-பொருளாதார முன்னேற்றம்.

· அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் வறுமையை ஒழித்தல்

· அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டுதல்

· தரவுகள் அடிப்படையிலான ஆளுகை வாயிலாக பொதுமக்களுக்கு மானியங்களும் சேவைகளும் முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்தல்

· கட்டமைப்புகள் உருவாக்க போதிய நிதி ஆதாரங்களைக் கண்டறிதல்

· சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதிசெய்தல்

முதல்வரின் முகவரி

15) பொதுமக்களின்குறைகளைஉடனுக்குடன் தீர்த்தும், தேவைகளை நிறைவு செய்தும், மக்கள் நல அரசின் இலக்கணமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தோடுதான், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையையும், முதலமைச்சரின் தனிப் பிரிவையும் (CM Cell)இணைத்து “முதல்வரின்முகவரி” என்றபுதியதுறைஉருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் இதுவரை, 10,01,883 மனுக்களுக்கு உரியதீர்வுகாணப்பட்டுள்ளது.

மத்திய-மாநில நிதி உறவுகள்

16) மதிப்புக்கூட்டுவரி நடைமுறையில் இருந்தபோது,தமிழ்நாடுஅடைந்தவருவாய்வளர்ச்சியை, சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் எட்ட இயலவில்லை.இது மட்டுமின்றி, கோவிட் பெருந்தொற்று அனைத்து மாநிலங்களின் நிதிநிலையை பெருமளவில் பாதித்துள்ளது. இந்நிலையில்,சரக் குமற்றும் சேவைவரி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும் கால வரையறை30.6.2022 ஆம் நாளன்று முடிவுக்கு வருகிறது. இதனால்,வரும்நிதியாண்டில், சுமார் 20,000 கோடிரூபாய் நிதி இழப்பினை தமிழ்நாடு சந்திக்க நேரிடும்.

கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வருவாய் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால்,இந்த இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசிற்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த நியாயமான கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கும் என நம்புகிறேன்.

17) நாட்டின் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.12 சதவீதமாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 10 சதவீதமாகும்.இவற்றிற்கு ஏற்ற நிதிப்பகிர்வை மத்திய நிதிக்குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை. 15வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு வெறும் 4.079 சதவீதமாகும். 15வது மத்திய நிதிக்குழு ஐந்தாண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக மொத்தம் 21,246 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இத்தொகையானது, 14வது நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 17,010 கோடி ரூபாய் மானியங்களைக் காட்டிலும் குறைந்த அளவிலேயே

அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு குறிப்பிட்ட மானியங்களையும், துறைகளுக்கு குறிப்பிட்ட மானியங்களையும் 15வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இத்தொகையை நடைமுறையிலுள்ள மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடனும் (Centrally Sponsored Schemes) மத்திய துறைத் திட்டங்களுடனும் (Central Sector Schemes) இணைக்காமல், தனியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாநில நிதிக்குழு

18) பெருந்தொற்றின் காரணமாக, ஆறாவது மாநில நிதிக் குழுவின் காலவரை இந்த அரசால் ஒன்பது மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அண்மையில் இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின்மீது, அரசு தனது நடவடிக்கை எடுத்த அறிக்கையை (Action Taken Report) விரைவில் இம்மாமன்றத்தில் தாக்கல் செய்யும்.

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு

19) எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று தமிழ் மொழியைப் போற்றி, அதனை உலகெங்கும் பரவச் செய்வதே இந்த அரசின் தலையாய குறிக்கோளாகும். தமிழ்மொழியின் தொன்மையையும்செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன்தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது

அவசியமாகும்.தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில்,தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.இத்திட்டத்திற்காக,இந்த ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

20) தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவைப் பரப்பிடவும், பெண்ணடிமைத்தனத்தைஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும்வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார். அவரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் காலத்தை வென்று இன்றும் ஒளிர்கின்றன. தனித்துவமிக்க அவரது எழுத்துகளை எட்டுத்திக்கும் எடுத்துச் சென்று, அவரது முற்போக்குச் சிந்தனையால் அனைவரையும் பயனடையச் செய்வது இந்த அரசின் கடமையாகும்.இதனை நிறைவேற்றும் விதமாக, உரிய அறிஞர் குழுவின் பரிந்துரைகளின்படி, பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

21) தாய்மொழி கல்வியே தலைசிறந்த கல்வி என்பது அறிவியல் கூறும் உண்மையாகும். தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல், நோட்டுப்புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவியின்றிச் செயல்பட்டு வரும், தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

22) மாநிலத் தொல்லியல் துறை கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளுடன் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆகிய மூன்று இடங்கள் உட்பட ஏழு இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுகளை மேற்கொள்கின்றது. மேலும், புதிய கற்கால இடங்களைத் தேடி 5 மாவட்டங்களில் கள ஆய்வும் (exploration), பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் இடங்களைத் தேடிக் கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

23) இடைச் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினை கண்டறிவதற்கு இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து

இந்த ஆண்டு முன்கள ஆய்வு (reconnaissance) மேற்கொள்ளப்பட உள்ளது. ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகள், இரண்டு இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் ஐந்து கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

24) பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும்,அகழ்வைப்பகங்களும் (on-site museums) மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாண்டு,விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல்பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் அகழ்வைப்பகம் ஆகியவை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

25) மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களைஅவற்றின் தனித்துவம்மாறாமல் புனரமைத்து, பாதுகாக்கும் பொருட்டு இக்கட்டடங்களைச் சீரமைப்பதற்கு இவ்வாண்டுசிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x