Published : 18 Mar 2022 12:02 PM
Last Updated : 18 Mar 2022 12:02 PM

தமிழக பட்ஜெட் 2022-23 கவனம் செலுத்தும் 11 பொருண்மைகள்: நிதியமைச்சர் பட்டியல்

தமிழக பட்ஜெட் 2022-23 தாக்கல் செய்வதற்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: "தற்போது, நமது பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்று வர, சமூகநலத் திட்டங்களில் எவ்விதக் குறையுமின்றி, நமது முன்னுரிமைகளை மறுபரிசீலித்து சமூகக் கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்” என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழக பொது பட்ஜெட் 2022-23-ஐ சட்டபேரவையில் தாக்கல் செய்து அவர் கூறியது: “முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய நிதி வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்யும் விதமாக இந்த வரவு‑செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு‑செலவுத் திட்டம் பின்வரும் பொருண்மைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தும்:

  • வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளின் வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்.
  • சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல்
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை பெறும் திறனை அதிகரித்தல்
  • புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் தற்போதிருக்கும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் வாயிலாகவும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
  • கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் மகளிரின் முன்னேற்றம்.
  • விளிம்பு நிலையில் உள்ளோரின் சமூக-பொருளாதார முன்னேற்றம்.அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் வறுமையை ஒழித்தல்
  • அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டுதல்தரவுகள் அடிப்படையிலான ஆளுகை வாயிலாக பொதுமக்களுக்கு மானியங்களும் சேவைகளும் முழுமையாகச் சென்றடைவதை உறுதிசெய்தல்
  • கட்டமைப்புகள் உருவாக்க போதிய நிதி ஆதாரங்களைக் கண்டறிதல்
  • சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதிசெய்தல்.”

பட்ஜெட் தொடர்பாக அவர் மேலும் வெளியிட்ட சில தகவல்கள்: "எதிர்பாராமல் பெருமளவில் செலவினங்கள் ஏற்பட்ட போதிலும், சிறந்த நிதி நிருவாகத்தையும் நிதி மேலாண்மையையும் அரசு கடைப்பிடித்தது. இதன் பயனாக, மொத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வெறும் ஒரு சதவீதம் உயர்வினையே முதல் துணைநிலை மதிப்பீடுகளில் கோரினோம்.

2014 ஆம் ஆண்டு முதல், வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு, 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. மேலும் இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது.

இந்த அரசின் தீர்க்கமான நடவடிக்கைகளும் நிர்வாகத் திறனுமே இதனை சாத்தியமாக்கியுள்ளது. இந்த உறுதியான நடவடிக்கைகளின் அடித்தளமாக இருப்பவர் திராவிட மாதிரி வளர்ச்சியின் (Dravidian Model) இலக்கணமாகத் திகழ்பவர், தமிழக முதல்வர். மத்திய‑மாநில நிதி உறவுகள், தரவு அடிப்படையிலான ஆளுகை (Data Centric Governance), அரசு உடைமைகள் மற்றும் இடர் மேலாண்மை (Asset &Risk Management), அதிக பொறுப்புடைமை மற்றும் உற்பத்தித்திறன் (Increased Accountability and Productivity), சட்டமன்றத்தின் பங்கினை வலுப்படுத்துதல் ஆகிய ஐந்து முக்கிய முன்னெடுப்புகளை, இந்த அரசு நிருவாகத் திறனை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் என்று கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த ஒவ்வொரு முன்னெடுப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மத்திய‑மாநில நிதி உறவுகளை ஆய்வு செய்ய சிறப்பு ஆலோசனைக் குழு அமைத்தல், தரவுத் தூய்மை (data purity) திட்டச் செயலாக்கம், மாநிலத்தின் உள்தணிக்கை அமைப்புகளை சீரமைத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.

வரும் நிதியாண்டு மிகவும் இக்கட்டான,பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வாய்ப்புகள் அதிகம்.தற்போது உக்ரைனில் நடைபெற்றும் வரும் போரின் காரணமாக உலகளாவிய பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்புள்ளது. இதனால் நுகர்வு தேவையில் வீழ்ச்சியும் (demand shocks), உலகளாவிய அளிப்பிலுள்ள பாதிப்புகளும் (global supply disruptions), மாநிலப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பணவீக்கம், வட்டி வீதம் ஆகியவை அதிகரிக்குமென பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கமும் முற்றிலுமாக நீங்கிவிட்டது என்று தற்போது கூற இயலாது.

இது மட்டுமின்றி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முழு இழப்பை அரசு ஏற்பதன் விளைவையும், அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் முழு தாக்கத்தையும், கடன் தள்ளுபடியின் தாக்கத்தையும் வரும் நிதியாண்டில் இந்த அரசு சந்திக்க நேரிடும். இத்தகைய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் நிதி முன்னுரிமைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நமது அரசியல் முன்னோர்களான நீதிக்கட்சியின் காலத்திலிருந்தே, சமூகநீதிக்கான அளவுகோல் திராவிட இயக்கத்திற்கான அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன. பொருளாதாரப் பார்வையில் சமூகநலனுக்கும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கடந்த ஆண்டில் பெருந்தொற்றின் காரணமாக சமூகத்தில் நலிந்த பிரிவினர்களின் துயர் துடைப்பதை குறிக்கோளாகக் கொண்டு நாம் பணியாற்றினோம். தற்போது, நமது பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற்று வர, சமூகநலத் திட்டங்களில் எவ்விதக் குறையுமின்றி, நமது முன்னுரிமைகளை மறுபரிசீலித்து சமூகக் கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

இந்த அணுகுமுறையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய நிதி வழங்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவுசெய்யும் விதமாக இந்த வரவு‑செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x