Published : 18 Mar 2022 08:30 AM
Last Updated : 18 Mar 2022 08:30 AM

ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பெருவிழா மார்ச் 20-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது: கும்பகோணம் அருகே 28-ம் தேதி தேரோட்டம்

திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உற்சவரான பூமிதேவி தாயாருடன் எண்ணப்பன். (கோப்பு படம்)

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயில் பங்குனிப் பெருவிழா வரும் 20-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

108 திவ்ய தேசங்களில் சிறப்பு வாய்ந்ததும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமான திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி, இவ்விழா வரும் 20-ம்தேதி காலை 9.30 மணிக்கு கொடிஏற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பின்பு, தினமும் காலை வெள்ளிப் பல்லக்கும், மாலையில் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் புறப்பாடும் நடைபெறும்.

அதன்படி, 20-ம் தேதி மாலை இந்திர விமானத்திலும், 21-ம் தேதி வெள்ளி சூரியப்பிரபை வாகனத்திலும், 22-ம் தேதி ஆதிசேட வாகனத்திலும், 23-ம் தேதி கருட வாகனத்திலும், 24-ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 25-ம் தேதியானை வாகனத்திலும், 26-ம் தேதி புன்னை மர வாகனத்திலும், 27-ம்தேதி வெள்ளிக்குதிரை வாகனத்திலும் புறப்பாடு நடைபெறும். மேலும், 27-ம் தேதி காலை வெண்ணெய்த் தாழி அலங்காரம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 28-ம் தேதி காலை 9 மணிக்குதிருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று காலை 10மணிக்கு ஒப்பிலியப்பன் மலராடைஅணிவிப்பு திருக்காட்சி நடைபெறும். 29-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், அன்று இரவு 8 மணிக்கு சப்தாவரணம், 30-ம்தேதி பகல் 12 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 31-ம் தேதி பகல் 12 மணிக்கு அன்னப்பெரும்படையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும்உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x