Published : 15 Apr 2016 12:28 PM
Last Updated : 15 Apr 2016 12:28 PM

கோவை தெற்கு பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் நூதனப் பிரச்சாரம்

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன், நூதன பிரச்சார யுக்திகளால் வாக்காளர்களை ஈர்த்து வருகிறார்.

கோவையின் மையப் பகுதியான தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் அக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கோவையின் முக்கியத் தொகுதியாகக் கருதப்படும் இத் தொகுதியில் பாஜகவுடன், அதிமுகவும், காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. இதனால் பாஜகவினர் சற்று கூடுதலாகவே பிரச்சார முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்.2-ம் தேதி முதலே பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர்.

வழக்கமாக இல்லாமல் நூதன பிரச்சாரங்களை பாஜகவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, கடந்த 5-ம் தேதி, புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடனான ‘காபி வித் வானதி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வணிக வளாகத்துக்கு வந்து செல்லும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மலையாளத்தில்…

அதைத் தொடர்ந்து, கோவையில் வசிக்கும் மலையாள மக்களிடம் வாக்குச் சேகரிப்பை நேற்று தொடங்கினார். கேரள மக்களின் பண்டிகையான விஷு கொண்டாடப்பட்டது. அதற்காக, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் விழா நடைபெற்றது. அங்கு தனது தொண்டர்களுடன் சென்ற வானதி சீனிவாசன், பிரத்யேகமாக மலையாளத்தில் அச்சிடப்பட்ட, வாழ்த்து மற்றும் வாக்கு சேகரிப்பு வாசகங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் அளித்தார். ‘ஆலயம் தொழுவோம் வானதியுடன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, மேலும் சில கோயில்களிலும் அடுத்தடுத்து நடைபெற்றது.

தேர்தல் விதிமுறைகளை மீறி கோயில் வளாகத்தில் வாக்கு சேகரித்ததாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

இது குறித்து வானதி சீனிவாசனிடம் பேசியபோது, ‘அனைத்து மக்களிடமும் நேரடியாகச் சென்று வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ‘காபி வித் வானதி’ நிகழ்ச்சி மூலம் இளைய தலைமுறையின் எதிர்பார்ப்புகளை தெரிந்துகொள்ள முடிந்தது.

கோவையில் கேரள மக்களின் வாக்குகள் அதிகமிருப்பதாலும், விஷு பண்டிகையை முன்னிட்டும் அவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறி வாக்கு சேகரித்தேன். அவர்களுக்கு வாழ்த்துகளைக் கூறுவதற்காகவும், வழிபாட்டுக்காகவும் மட்டுமே கோயிலுக்கு சென்றேன். எனக்கு மலையாளம் தெரியாது என்பதால், துண்டுப் பிரசுரத்தில் மலையாளத்தில் எழுதியிருப்பதை படித்துக் காட்டுமாறு பெண் ஒருவரிடம் கேட்டேன். மற்றபடி கோயில்களுக்குள் எங்கும் வாக்கு சேகரிக்கவில்லை. அது விதிமீறல் என்பதும் எனக்குத் தெரியும்.

அடுத்ததாக ‘உங்களுடன் வானதி’ என்ற நிகழ்ச்சி மூலம் பெண்களுடனும், துப்புரவுப் பணியாளர்களுடனும் சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளேன்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x