Last Updated : 25 Apr, 2016 02:23 PM

 

Published : 25 Apr 2016 02:23 PM
Last Updated : 25 Apr 2016 02:23 PM

தொகுதி பங்கீட்டில் புதுக்கோட்டையில் வெற்றி பெற்ற தொகுதிகளை இழந்த இந்திய கம்யூனிஸ்ட்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருந்த புதுக்கோட்டை, ஆலங்குடி ஆகிய தொகுதிகளில் ஒன்றையாவது பெற்றுவிட தொடர்ந்து போராடியும் கிடைக்காததால் அக்கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர்.

தேமுதிக- மநகூ- தமாகா ஆகிய கட்சிகளின் கூட்டணி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளன. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை (தனி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கும், திருமயம் தமாகா கட்சிக்கும், ஆலங்குடி மதிமுகவுக்கும், அறந்தாங்கி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

ஆலங்குடி தொகுதியில் கடந்த 1996-ல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டபோது, அதிமுகவைச் சேர்ந்த சுயேச்சையாகப் போட்டியிட்ட அ.வெங்கடாசலத்திடம் 652 வாக்குகள் வித்தியாசத்திலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.ராஜசேகரன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதன்பிறகு 2006-ல் திமுக கூட்டணியில் மீண்டும் போட்டியிட்ட இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.ராஜசேகரன் அதிமுக வேட்பாளர் அ.வெங்கடாசலத்தைவிட 9,151 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அதேபோல, கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.பி.முத்துக்குமரன், திமுக வேட்பாளர் பெரியண்ணன் அரசைவிட 3,101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புதுக்கோட்டை, ஆலங்குடி ஆகிய இரு தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமாக இருந்ததால் இதில் ஒன்றையாவது பெறவேண்டுமென கூட்டணிக் கட்சிகளிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை போராடியது. எனினும், கேட்ட 2 தொகுதிகளையும் பெற முடியாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூறியது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவில் இருந்து விலகியதிலிருந்து தன்னோடு இருக்கும் அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சந்திரசேகருக்காக ஆலங்குடி தொகுதியைப் பெற்றுவிட்டார்.

புதுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன், 2012-ல் விபத்தில் மரணமடைந்ததால் அந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக, டெபாசிட் வாங்கியதால் மீண்டும் அதே தொகுதிதான் வேண்டுமென அந்த கட்சியை சேர்ந்த ஜாகிர் உசேன் மீண்டும் புதுக்கோட்டை தொகுதியைப் பெற்றுள்ளார்.

இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சாதகமான 2 தொகுதிகளும் கிடைக்கவில்லை. ஆலங்குடி அல்லது புதுக்கோட்டை தொகுதி கிடைத்திருந்தால் அங்கு மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் போட்டியிட்டிருப்பார். மாறாக அறந்தாங்கி கிடைத்துள்ளது. அங்கு, வேட்பாளராக லோகநாதன் போட்டியிடுகிறார் என்றனர்.

புதுக்கோட்டை, ஆலங்குடி தொகுதிகளில் ஒன்றையாவது பெறவேண்டுமென கூட்டணிக் கட்சிகளிடம் இந்திய கம்யூ.தலைமை போராடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x