Published : 18 Mar 2022 08:05 AM
Last Updated : 18 Mar 2022 08:05 AM
சென்னை: சென்னை முதல் செங்கல்பட்டு இடையிலான உயர்நிலை சாலைப் பணிகள் 6 மாதங்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, பல்வேறு நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்தும், தமிழக அரசின் ஒத்துழைப்பு குறித்தும் அவர் விவாதித்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலு நேற்று கூறியதாவது: சென்னை-திண்டிவனம் சாலையை 8 வழிச் சாலையாக மாற்றும் பணியை விரைவுபடுத்தல், மாதவரம்-சென்னை வெளிவட்டச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுதல், திருச்சி-துவாக்குடி, தாம்பரம்-செங்கல்பட்டு பரணூர், மதுரவாயல்-பெரும்புதூர் சுங்கச்சாவடி சாலைகளை உயர்நிலைச் சாலைகளாக மாற்றுதல், கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுதல், கோவை, திருச்சியில் அரைவட்டச் சாலைகள் அமைத்தல் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
மேலும், பரணூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் அதிக அளவிலான சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தேன். தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சிலர், மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒப்பந்ததாரர்களிடம் பேசி, குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நிலுவையில் உள்ள பணிகளில் 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.
திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையிலான சாலைப் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளையும் விரைவுபடுத்துமாறு தெரிவித்தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் கூறினார்.
மதுரவாயல்-துறைமுகம் சாலைத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கிய நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு இரண்டு அடுக்கு பாலம் கட்டப்படுகிறது. சில மாதங்களில் பணிகள் தொடங்கும்.
செங்கல்பட்டு முதல் சென்னை வரை உயர்நிலைச் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து அளிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியை விரைவாக மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்னும் 6 மாதங்களில் இப்பணிகள் தொடங்கப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நெடுஞ்சாலைத் துறைச் செயலர் தீரஜ்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT