Published : 18 Mar 2022 05:43 AM
Last Updated : 18 Mar 2022 05:43 AM

ஆவடி நரிக்குறவர் இன மக்களிடம் காணொலி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆவடியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களிடம், அமைச்சர் சா.மு.நாசரின் செல்போன் மூலம் வீடியோகாலில் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ஆவடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆவடியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களிடம் வீடியோ காலில் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடிபஸ் நிலையம் பின்புறம் நரிக்குறவர்இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு நரிக்குறவர் இன மக்கள் 180-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் திவ்யா,பிரியா, தர்ஷினி ஆகியோர், தாங்கள் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அரசுப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் சந்திக்கும் சமூக புறக்கணிப்பு உள்ளிட்டவை குறித்து, விரிவாகப் பேசிய காணொலி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பள்ளி மாணவிகள் திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகியோரை தலைமைச் செயலகத்துக்கு நேரில் அழைத்துப் பேசினார். அப்போது, அவர்மாணவிகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.

இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று காலை ஆவடி நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகத்துக்குச் சென்று, நரிக்குறவர் இன மக்களின் குறைகளைக் கேட்டார்.

அப்போது, அமைச்சரின் செல்போன் மூலம் வீடியோ காலில் நரிக்குறவர் இன மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது நரிக்குறவர் இன மக்களிடம் முதல்வர், "உங்களைச் சந்திக்க ஆவடிக்கு இன்னும் ஒரு வாரத்தில் நேரில் வருகிறேன். அப்போது உங்களுடைய குறைகளைக் கேட்டுஅதை நிவர்த்தி செய்வேன். நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா?’ எனக் கேட்டார்.

அதற்கு நரிக்குறவர் இன மக்கள், "கறி சோறு போடுகிறோம். நீங்கள் எங்கள் குடியிருப்புக்கு வந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.எங்களுக்கு அளிக்கப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழைப் பழங்குடியினர் சான்றிதழாக வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.

இந்நிகழ்வில், ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர்எஸ்.பாபு,மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x