

தேமுதிக அதிருப்தியாளர்களை அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறி அழைத்துள்ளனர் என்று அக்கட்சியின் எம்எல்ஏ பார்த்தசாரதி கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டும் என சந்திரகுமார் தமது ஆதரவாளர்களுடன் பகிரங்கமாக வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து தேமுதிகவில் போர்க்கொடி தூக்கிய சந்திரகுமார் உள்பட 10 நிர்வாகிகளும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக விஜயகாந்த் அறிவித்தார்.
இந்நிலையில் சந்திரகுமார் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் தேமுதிகவை அழிக்க நினைக்கிறார்கள் என்று அக்கட்சியின் எம்எல்ஏ பார்த்தசாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக செல்லக்கூடாது என நாங்கள் சொல்லவில்லை. எந்தக் கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினோம்.
தலைவர் இறுதி முடிவு எடுத்தால் தொண்டர்கள் அதற்கு கட்டுப்பட வேண்டும். தேமுதிகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள். தேமுதிக அதிருப்தியாளர்களை அமைச்சர் பதவி கொடுப்பதாக கூறி அழைத்துள்ளனர்.''
இவ்வாறு பார்த்தசாரதி கூறினார்.