

வேலூர் அருகே கிடங்கில் பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 35 டன் ரேஷன் அரிசி, 2 டன் கோதுமையுடன் ஒரு லாரி மற்றும் 2 சரக்கு வாகனங்களையும் பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் உட்பட 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பிரசாத் நகர் பகுதியில் உள்ள கிடங்கில் இருந்து லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட திட்டமிட்ட நுண்ணறிவு பிரிவு காவல் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் ராதாகிருஷ்ணன், சண்முகம், ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் அந்த கிடங்கில் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர்.
அதில், தனபால் என்பவருக்குச் சொந்தமான அந்த கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை, மூட்டைகளாக ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் இருந்தன தெரியவந்தது. இந்த தகவலையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அங்கிருந்த லாரி ஒன்றில் சோதனை செய்ததில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த 22 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் மொத்தம் 35 டன் அளவுக்கு ரேஷன் அரிசியும், 2 டன் கோதுமையும் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் தனபால் மற்றும் லாரி ஓட்டுநர் கார்த்திக் ஆகியோரிடம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சதீஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், தனபால் பல ஆண்டுகளாக இதுபோன்ற கிடங்குகளில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து பெரியளவில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி வருவது தெரியவந்துள்ளது.
தனிப்படை காவலருக்கு தொடர்பு
இந்த சோதனை தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த சோதனை நடைபெற்றபோது பிடிபட்ட தனபாலின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து அழைப்பு வந்தது. செல்போனில் ஏடிஜிபி பேசுகிறார் என சோதனைக்குச் சென்ற காவலர்களிடம் செல்போனை கொடுத்து பேசுமாறு தனபால் கூறியுள்ளார்.
தொடர்ந்து வந்த அந்த அழைப்பு எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த எண் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை யில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவருடையது என தெரியவந்தது. ஆனால், அந்த அழைப்பை பேசாமல் சோதனை நடைபெற்றது. ஒரு லாரி, 2 சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது’’ என்று தெரிவித்தனர்.