Published : 17 Mar 2022 04:09 PM
Last Updated : 17 Mar 2022 04:09 PM
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை சீரமைத்திட 9 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிடவும், நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்றன.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திருப்புகழ் தலைமையில் வெள்ள மேலாண்மை குழு அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், வருகின்ற பருவமழைக் காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில் நீர் தேங்கிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்கிட உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம், வார்டு-58, வேப்பேரி நெடுஞ்சாலையில் 750 மீட்டர் நீளத்திற்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார்.
மேலும் திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு – 73, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் 790 மீட்டர் நீளத்திற்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், வார்டு-74, பெரம்பூர் நெடுஞ்சாலை தெற்குப் பகுதியில், 880 மீட்டர் நீளத்திற்கு 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார்.
மேலும், மயிலாப்பூர் ரயில்வே நிலையம் அருகில், வார்டு-126, ராமாராவ் சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு – 123, தேவநாதன் தெருவில் 300 மீட்டர் நீளத்திற்கு 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, த.வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.விஜயராஜ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT