Published : 12 Apr 2016 08:43 AM
Last Updated : 12 Apr 2016 08:43 AM

மதுவிலக்கு: அரசியல் கட்சிகளின் வாக்குறுதி சாத்தியமா?

ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என திமுக வாக்குறுதி அளித்துள்ளது. ‘ஒரே கையெழுத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை’ என்று கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். மதுவிலக்கை செயல்படுத்துவது சாத்தியமா, சாத்தியமற்றதா என்பது குறித்து பல்வேறு தரப்பினர் ‘தி இந்து’ விடம் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு

மதுவிலக்கை உடனடியாக கொண்டு வர முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். தேர்தலை முன்னிட்டு தான் மதுவிலக்கு பற்றி அறிவித்தி ருக்கின்றனர். கேரளாவிலும், பிஹாரி லும் மதுவிலக்கு கொண்டு வந்தனர். கேரளாவில் மதுவிலக்கு கொண்டு வந்து பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தமி ழகத்திலும் அதுபோல கொள்கை அறிவிப்பு அறிவிக்க முடியும். படிப் படியாக கொண்டு வரப்படும் என்று சொல்லிருப்பதைப் பார்த்தால் சங்கடம் இருப்பதுபோல தெரிகிறது.

மதுபானக் கடைகள் நடத்தியதில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சி களும் சூடுகண்ட பூனைகள். அதை எளிதாக விட்டுவிட மாட்டார்கள். மதுவிலக்கை ‘தேர்தல் ஸ்டண்ட்’ போலத்தான் கூறியுள்ளனர். அதிமுக, திமுக அல்லாத ஒரு மாற்று அரசு வரும்போதுதான் மது உண்மையாக ஒழியும் என்பதே எனது கருத்து.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன்:

ஒரே கையெழுத்தில் மதுவிலக்கு கண்டிப்பாக சாத்தியம். படிப்படியாக என்பது சரியாக வராது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கொண்டுவந்த மது விலக்கை அவருக்குப் பிறகு தமிழ கத்தை ஆண்ட அத்தனை முதல் வர்களும் கடைபிடித்தனர். குறிப்பாக ‘எனது ஆட்சியே போனாலும் பர வாயில்லை, மதுக்கடைகளை திறக்க மாட்டேன்’ என திடமாக அறிவித்து அதை செயல்படுத்தினார் அண்ணா. ஒரே கையெழுத்தில் தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த ஓமந்தூராரால் முடிந்தது என்றால் அவருக்கு இருந்த சாமர்த்தியம் இவர்களுக்கு இல்லையா?

மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் எனக் கூறினால் அதை ஏற்க முடியாது. திருடுபவனை பிடித்தாலும் திருட்டு நிற்காது என்பதற்காக திருட்டை அனுமதித்து அதை சட்டபூர்வமாக்கி விடலாமா? ஒரு தீமைக்கு இன்னொரு தீமை பதில் ஆகாது.

காந்தியவாதி சசிபெருமாள் மகன் எஸ்.விவேக்

அதிமுக, திமுக இரு கட்சிக் காரர்களுக்கு சொந்தமான மது ஆலைகளை மூடாதவரை தமிழகத்தில் மது விலக்குக்கு சாத்தியமில்லை. திமுக, பாமக, மக்கள் நலக்கூட்டணி என பல கட்சிகள் மதுவிலக்கை முன் னிறுத்தியதால் தோல்வி பயத்தில் அதிமுகவும் படிப்படியாக அமல் படுத்துவதாக அறிவித்துள்ளது.

மதுஒழிப்பு போராளி மாணவி நந்தினி:

இதில் யார் சொல்வது சாத்தியம்? யார் கூறுவது சாத்தியம் கிடையாது? என்பதை தமிழக மக்கள்தான் தீர் மானிக்க வேண்டும். ஒரே கையெ ழுத்தில் பூரண மதுவிலக்கு என்பது தான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக இருக்க முடியும். எல்லா அரசியல் கட்சிகளும் குற்றத்தை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள் ளதால் இனி தமிழகத்தில் மதுக் கடைகளே இருக்காது என்ற நம்பிக்கை மட்டும் இப்போது கிடைத் துள்ளது.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு:

மதுபானக் கடைகளை ஒரே நாளில் மூட முடியும் என்பதை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் நிரூபித்திருக்கிறார். எனவே, பூரண மதுவிலக்கு என்பது 100 சதவீதம் சாத்தியமே. அதில் எந்த கஷ்டமும் இல்லை. ஒரேநாளில் மதுபானக் கடைகளை திறந்த அர சால் அவற்றை ஒரேநாளில் மூட முடியாதா? மதுபானக்கடைகளை மூடும் அதேநேரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவோ அல்லது சுகாதாரத்துறை மூலமாகவோ அரசு உளவியல் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி அதன்மூலம் கவுன்சலிங் அளிக்கலாம்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் டி.தனசேகரன்:

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படி யாக கொண்டுவர வேண்டும் என அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம்.

முதல்கட்டமாக மாதம் 1-ம் தேதியும், வாரத்தில் ஞாயிறுக்கிழமைகளிலும் மதுக்கடைகளை மூட வேண்டும். மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும். பார்களை உடனடியாக மூட வேண்டும். மதுவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒவ் வொரு தாலுகாவிலும் மறுவாழ்வு மையம் திறக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசுப் பணிகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா

மதுவிலக்கு உடனடியாகவும் படிப்படியாகவும் சாத்தியம்தான். சாத்தி யமான இந்த விஷயத்தை அதிமுக முன்னரே செய்திருக்கலாம். இப்போது வாக்குக்காக சொல்கிறார்கள். கருத்து ரீதியாக பூரண மதுவிலக்கை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கி றது. எத்தனையோ பேர் குடிநோயாளி களாக இருக்கிறார்கள் என்பதை காரணம் காட்டி பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூற முடியாது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் என்.மணிமேகலை

முழு மதுவிலக்கு, படிப்படியாக மதுவிலக்கு என முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை அன் றாடக் கூலிகளான அடித்தட்டு மக்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களை நாம் குடி நோயாளி களாகவே பார்க்க வேண்டும்.

திடீரென குடியை நிறுத்த அவர்க ளால் முடியாது. பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குகூட சென்று விடுவர். எடுத்த எடுப்பிலேயே முழு மதுவிலக்கு கொண்டு வந்தால் இதுவரை கிடைத்து வந்த வருமானமும் குறைந்து அரசின் நலத் திட்டங்களும் பாதிக்கப்படும். எனவே, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதே சரியாக இருக்கும்.

பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா

கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் நடத் திய போராட்டங்கள், இந்த இரு கட்சிகளையும் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி அளிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளி யுள்ளன. இதை மக்கள் போராட் டத்துக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். ஒரே நாளில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்பது உண்மை தான். படிப்படியாக என சொல்லி விட்டு பல ஆண்டுகள் வரை மது விற்பனையை தொடரவும் வாய்ப் புள்ளது. எனவே, குறிப்பிட்ட காலக் கெடு நிர்ணயித்து அதற்குள் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனை மனநல மருத்துவத்துறை முன்னாள் பேராசிரியர் ஜி.எஸ்.சந்திரலேகா

டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் உடனடியாக மூடுவதும், படிப்படியாக மூடுவதும் எல்லாம் ஒன்றுதான். அதனால் பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது. டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என்று முன்கூட்டியே தெரிந்துவிட்டதால் மது குடிப்பவர்கள் மனதளவில் தயாராகிவிடுவர். மனநலம் பாதிக்கப்பட மாட்டார்கள். டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் ஓரிரு நாட்கள் மட்டும் அவர்கள் கஷ்டப்படுவர். அதன்பின் மது குடிப்பவர்கள் தேவையான மாற்று ஏற்பாடு செய்துகொள்வர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x