Published : 17 Mar 2022 07:35 AM
Last Updated : 17 Mar 2022 07:35 AM
கோவை: கோவை அருகே தாய், 2 மகள்கள் யு.பி.எஸ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் மூச்சுத்திணறி உயிர்இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, யு.பி.எஸ் கருவியை முறையாக பராமரிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள், பழுது நீக்குவோர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை துடியலூரை அடுத்த உருமாண்டம்பாளையம் ரோஸ் கார்டனைச் சேர்ந்த விஜயலட்சுமி(50), அவரது மகள்கள் அர்ச்சனா(24), அஞ்சலி(21) ஆகியோர், வீட்டிலிருந்த யு.பிஎஸ் கருவி வெடித்து தீ விபத்து ஏற்பட்டு, அதனால் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறி நேற்று முன்தினம் உயிரிழந்தனர். தற்போதைய சூழலில், பெரும்பாலான வீடுகளில் யு.பி.எஸ் பயன்படுத்தப்படுகிறது. இச்சூழலில், கோவையில் யு.பி.எஸ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் மூவர் உயிரிழந்தது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தவிர்க்க, யு.பி.எஸ் கருவியை முறையாக பராமரிப்பது அவசியம் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவையைச் சேர்ந்த யு.பி.எஸ் தயாரிப்பாளரான சிவசுப்பிரமணியன் கூறியதாவது:
3 வகை பேட்டரிகள்
யு.பி.எஸ் பேட்டரியில் லெட் ஆசிட் பேட்டரி, லித்தியம்-அயன் பேட்டரி, லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரி என 3 வகைகள் உள்ளன. லெட் ஆசிட் பேட்டரியில் இதுவரை பெரிதாக பிரச்சினை ஏற்பட்டதில்லை. லித்தியம்-அயன் பேட்டரி, லெட் ஆசிட் பேட்டரியைவிட சிறந்தது. நேரடியாக சாதாரண இன்வெர்டரில் இதனை இணைக்கக்கூடாது. லித்தியம்-அயன் பேட்டரியில் பிரச்சினை ஏற்பட்டால் அது வெடிக்கும். இதனால் கான்கிரீட் கூட உடைந்துவிடும். லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரியில் பிரச்சினை இருந்தால் மெதுவாக கரும்புகை வெளியேறும். வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்தால் புகை வெளியேறுவது தெரியாது. உடனே அதை வீட்டிலிருந்து வெளியேற்றி வைத்துவிட்டால், சிறிது நேரத்தில் புகை நின்றுவிடும். இறுதியில் அதிகப்படியான வெப்பம் காரணமாக தீ பிடிக்கும்.
யு.பி.எஸ் சிஸ்டத்துக்கு லித்தியம் வகை பேட்டரியை வாங்கும்போது அதில் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் (பிஎம்எஸ்) இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். பி.எம்.எஸ் பொருத்தியே இருந்தாலும் அதுவும் செயலிழக்க வாய்ப்புகள் உள்ளன. அந்த நேரத்தில் லித்தியம் வகை பேட்டரிகளும் இதுபோல் தீ பிடிக்கலாம்.
லித்தியம் வகை பேட்டரிகள் தொடர்ந்து தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் எந்த நிலையிலும் இது தீ பிடிக்காதவாறு உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. அதுவரை இவ்வகை பேட்டரிகளை வீட்டுக்கு வெளியே வைப்பதுதான் சிறந்தது.
யு.பி.எஸ் பேட்டரியை ஆண்டுக்கு இருமுறை கவனித்தால் போதும். பேட்டரி பழுது எனில் பேக்அப் கிடைக்காது. பீப் சத்தம் வரத் தொடங்கிவிடும். டிஸ்டில்ட் வாட்டர் குறைந்துவிட்டால் பேட்டரி சார்ஜ் ஆகாது. அது இருந்தால் மட்டுமே சார்ஜ் ஆகும். பேட்டரியை மூடி வைக்கக்கூடாது. தொழில்முறை அனுபவம் இல்லாதவர்களை கொண்டு பேட்டரியை பொருத்தக் கூடாது.
அனுபவம் உள்ளவர்களை கொண்டு பொருத்த வேண்டும். மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக, தரமற்ற பேட்டரிகளை வாங்கி பொருத்தக்கூடாது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT