Published : 17 Mar 2022 08:24 AM
Last Updated : 17 Mar 2022 08:24 AM

உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு: 'சமூக நீதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி' - ஸ்டாலின், பழனிசாமி, அன்புமணி வரவேற்பு

சென்னை: உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்களுக்கான மாணவர் சேர்க்கையில், கிராமப்புறங்களிலும், சிரமமான மலைப்பகுதிகளிலும் கடினமான இடங்களிலும் மற்றும் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு இந்த ஆண்டே செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அனுமதி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சமூகநீதி வரலாற்றில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப்பெரிய வெற்றி.

ஆட்சிப் பொறுப்பேற்றதும், மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது கிராமப்புற மருத்துவ சேவையைப் பெருக்க, அந்தப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். சமூகநீதியை மதிக்காத மத்திய பாஜக அரசுக்குப் பதிலாகச் சமூகநீதியைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மகத்தானது.

இதேபோல் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும். அதற்காகத் திமுக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும்.

எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: உயர் சிறப்பு மருத்துவ மேற்ப டிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து எனது தலைமையிலான அரசு கொண்டு வந்த அரசாணை செல்லும் என்றும், அதற்கான கலந்தாய்வு நடத்த அனுமதியும் அளித்துஉள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினை உளமாற வரவேற்கிறேன். தமிழர் நலனுக்காகவும் தமிழகம் தன்னிறைவு பெறுவதற்கும் அனைத்திந்திய அதிமுக தொடர்ந்து பாடுபடும் என உறுதி கூறுகிறேன்.

அன்புமணி: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க இடைக்கால அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படும்போது தான், உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் இறுதி வெற்றி கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தில் இதற்காக வலுவான வாதங்கள் முன்வைக்கப்படுவதை தமிழக அரசும், மருத்துவர் அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும். மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x