Published : 17 Mar 2022 07:40 AM
Last Updated : 17 Mar 2022 07:40 AM
சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் இடையே ரூ.6 ஆயிரம் கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
சென்னை துறைமுகம் மற்றும் தி மெட்ராஸ் சேம்பர் சார்பில் பிரதமரின் கதி சக்தி திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் பங்கேற்று பேசியதாவது:
ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனில் பல்துறை பங்களிப்பு தேவைப்படுகிறது. இத்துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, சரக்கு போக்குவரத்துக்காக நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவே பிரதமரின் கதி சக்தி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து ரூ.6 ஆயிரம் கோடியில் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. அதன்படி, இந்த சாலை சுமார் 20 கிமீ தூரம் கொண்டது.
கோயம்பேட்டிலிருந்து துறைமுகம் வரை ஈரடுக்கு மேம்பாலமாக இருக்கும். மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வரை ஓரடுக்கு மேம்பாலம் மட்டுமே அமைக்கப்படும். 13 இடங்களில் சாலையில் இருந்து இறங்கும் பாலங்களும் அமைக்கப்பட உள்ளன.
நேப்பியர் பாலம் முதல் சுமார் 9 கிமீ தூர கூவம் ஆற்றின் பகுதிகளில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு ஈரடுக்கு மேம்பாலமாக கட்டப்பட இருப்பதால், புதிதாக கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஐஎன்எஸ் அடையார் பகுதியில் உள்ள கடற்படை குடியிருப்புகளும் இந்தப்பகுதிக்குள் வருகின்றன. அவற்றை அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்ட சாலையில் பொதுமக்களின் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
விரைவில் தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக நிர்வாகம், கடற்படை ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். திட்டம் தொடங்கிய நாளில் இருந்து அதிகபட்சமாக 30 மாதங்களில் உயர்மட்ட சாலைகள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் பேசும்போது, சென்னை துறைமுகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி எஸ்.பி. சோமசேகர் பேசும்போது, ``இத்திட்டத்துக்காக கூவம் ஆற்றில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட தூண்கள் அகற்றப்படும். தற்போது ஆங்காங்காங்கே ஒரு தூண் மட்டுமே அமைக்கப்படும். சேலம்- சென்னை பறக்கும் சாலை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பணி முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார், தி மெட்ராஸ் சேம்பர் துணைத் தலைவர் டி.ஆர். கேசவன், சரக்கு போக்குவரத்துக் குழு தலைவர் யு.உதயபாஸ்கர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT