

தாம்பரம்: குடியிருப்புக்குள் புகுந்த முதலையை வனச்சரக அலுவலக ஊழியர்கள் நேற்று பிடித்துச் சென்றனர்.
தாம்பரத்தை அடுத்த கொளப்பாக்கம் ஏரியின் அருகே உள்ள வரபிரசாத் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள வீட்டு நுழைவாயிலின் முன்பு நேற்று நள்ளிரவு முதலைஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. முதலை ஊர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த தெருநாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன. அவற்றின் சத்தத்தைக் கேட்டு வந்து பார்த்த பகுதி மக்கள்முதலையைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தனர்.
இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சென்னை வேளச்சேரி தலைமையிடத்து வனச்சரக அலுவலக ஊழியர்கள் வந்துசுமார் 5 அடி நீளமுள்ள முதலையைப் பிடித்துச் சென்றனர். இதற்குமுன்பும் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதிகளுக்குள் முதலை புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் உள்ள சாமியார் மடகுளம், சதானந்தபுரம் ஏரி,நெடுங்குன்றம் ஏரிகளில் முதலைகள் அதிகமாக உள்ளன. பறவைகள் மூலமாகவும் முதலை குட்டிகள் எங்கள் கிராம நீர்நிலைகளில் வந்தன. அவ்வாறு வந்த முதலைகளே ஏரிகளில் வளர்கின்றன. வனத் துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் பல முதலைகளைப் பிடித்துள்ளனர். ஆனாலும் முதலைகள் குறையவில்லை. தற்போது கொளப்பாக்கத்தில் முதலை பிடிபட்டுள்ளது. வனத் துறையினர் தொடர்ந்து இங்குள்ள நீர்நிலைகளில் முதலைகளை முற்றிலும் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.