Published : 17 Mar 2022 07:56 AM
Last Updated : 17 Mar 2022 07:56 AM
வண்டலூர்: வண்டலூரில் வரும் 20-ம் தேதி 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் 20-ம் தேதி அன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
இம்முகாமில் 400-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இம்முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
மேலும், இம்முகாமுக்கு வரும் வேலை தேடுபவர்களுக்குத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்குப் பதிவுகள் செய்து திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வாயிலாகப் பதிவுகள் செய்யப்பட உள்ளன.
இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT