

புதிய வாக்காளர்களில் 80 சதவீதம் பேர் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக வைகோ தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சித்துராஜபுரம், படந்தால், வெங்கடாசலபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரச்சாரம் செய்தார்.
ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குருசாமியை ஆதரித்து அவர் பேசும்போது, ‘‘அதிமுக ஆட்சியில் திமுகவினருக்குச் சொந்தமான மதுபான ஆலையில் இருந்து ரூ.24 ஆயிரம் கோடிக்கு மது வாங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மிடாஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடிக்கு மது வாங்கப்பட்டுள்ளது.
மதுவை ஒழிக்க பல நூறு கி.மீ. நடைபயணம் மேற்கொண்டவன் நான். மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்தி உடல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் என் தாயார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுவை ஒழிப்போம்.
பணத்துக்காக மக்கள் ஓட்டுப் போட்டதால்தான் விருதுநகரில் நான் தோற்றேன். ஒன்றரை கோடி புதிய வாக்காளர்கள் உள்ளனர். இளைஞர்கள் தங்களது வீட்டில் அப்பா, அம்மா, சொந்தங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். முதல்வர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அரசு மருத்துவமனைக்குத் தான் சிகிச்சைக்கு செல்வோம்.
இளைஞர்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டுப் போட்டால் மாற்றம் வரும். 80 சதவீத புதிய வாக்காளர்கள் நமக்கு ஆதரவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது” என்றார்.