

ராமேசுவரத்தில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற பாம்பன் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தொடங்கி தென்குமரி வரையில் பழவேற்காடு, சென்னை மெரினா , மாமல்லபுரம் , பாண்டிச்சேரி ,பரங்கிப்பேட்டை, நாகபட்டினம், கள்ளி மேடு, கோடியக்கரை, அம்மாபட்டினம், பாசிப்பட்டினம், பாம்பன், ராமேசுவரம், கீழக்கரை , பாண்டியன்தீவு (தூத்துக்குடி மாவட்டம்) மணப்பாடு, கன்னியாகுமரி, முட்டம் உள்ளிட்ட இடங்களில் பன்னெடுங்காலமாக கலங்கரை விளக்கங்கள் உள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்துக்குப் பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து கலங்கரை விளக்கத்தையும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு கலங்கரை விளக்கங்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் முதன்முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மகாபலிபுரம், முட்டம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் உள்ள கலங்ரை விளக்கங்களில் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் இங்கு புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் ராமேசுவரம் தீவிலுள்ள பாம்பன் கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பாம்பனைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிக்கந்தர், மத்திய கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து துறைகளின் அமைச்சர் சர்வானந்த சோனோவாலுக்கு எழுதிய கடிதத்தில், பழம்பெருமை வாய்ந்த பாம்பன் கலங்கரை விளக்கத்தை ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்க வேண்டும், என அதில் தெரிவித்துள்ளார்.