

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் சொந்தமாவட்டமான சிவகங்கையில் அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடையே மோதல் போக்கு வலுத்து வருவதால் வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில் இளையான்குடி உள்ளிட்ட ஒன்றியங்களில் கடந்த சில மாதங்களாக கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த இளையான்குடி ஒன்றியக் கூட்டத்தில் அதிகாரிகள் முறையாகப் பதில் சொல்வதில்லை என்றும், கவுன்சிலர்களிடம் கேட்காமலேயே நிதியை எடுத்து செலவழிப்பதாகவும் கூறி தீர்மானங்களை நிறைவேற்றாமல் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதே பிரச்சினைக்காக காளையார்கோவில் ஒன்றியக் கூட்டத்திலும் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தீர்மானங்களை நிறைவேற்றாமல் புறக்கணித்தனர். சிவகங்கை ஒன்றியத்தில் கவுன்சிலர்களிடம் கேட்காமலேயே ஒப்பந்தப் பணிகளை விட்டதாகக் கூறி கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் வரவில்லை. போதிய கவுன்சிலர்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் கடந்த வாரம் கல்லலில் நடந்த மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தனி அலுவலர்கள் போல் செயல்படுவதாகக் கூறி, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிகாரிகள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் சென்னையில் பேரணி நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த மோதல் போக்குக்கு ஒன்றியம், ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்தது, நிதிகளை மடைமாற்றம் செய்வது, ஒப்பந்தப் பணிகளை ஒதுக்குவதில் பாரபட்சம், சில திட்டங்களை அதிகாரிகளே முடிவு செய்வது போன்றவையே காரணமாகக் கூறப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடையே மோதல் போக்கு வலுத்து வருவதால் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்திலேயே அதிகாரிகளுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவது, மாவட்ட நிர்வாகத்துக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.