தமிழகத்தில் முதல் முறையாக அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை

தமிழகத்தில் முதல் முறையாக அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் முதல்முறையாக அரசு உயர்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆய்விருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஆய்வு இருக்கைகள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே அமைக்கப்படும். ஆய்வு இருக்கை என்பது பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியரின்கீழ் 10 மாணவர்கள் ஒரு தலைப்பை ஆய்வு செய்து கட்டுரைகள் சமர்ப்பிப்பது ஆகும்.

உதாரணமாக, தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பாரதியார் ஆய்வு இருக்கை, பாரதிதாசன் ஆய்வு இருக்கை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த இப்படிப்பட்ட ஆய்வு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்திலேயே முதல்முறையாக, திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில், கரிகாலன் பெயரில் வரலாற்று ஆய்விருக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பள்ளியின் வரலாற்றுத் துறை ஆசிரியரும், ஆய்விருக்கை வழிகாட்டியுமான ஆதலையூர் சூரியகுமார் கூறியதாவது: எங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆய்வுத் திறனை ஏற்படுத்துவதற்காக தற்போது கரிகாலன் வரலாற்று ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

கரிகாலன் பற்றிய ஆய்வுகளை எங்கள் பள்ளி மாணவர்கள் 10 பேர் 10 தலைப்புகளில் மேற்கொள்கின்றனர். கரிகாலன் வரலாற்றைக் கூறும் நூல்கள், கல்லணையின் சிறப்புகள், கரிகாலனை அறிய உதவும் ஆதாரங்கள், கல்லணை, கரிகாலனின் கொடைத் தன்மை, கல்லணை வரைபடம், கரிகால் சோழனின் சமகாலத்தவர்கள், கரிகாலன் பெயர்க் காரணம், இலக்கியங்களில் கரிகாலன், நாங்கூர் கல்வெட்டு ஆகிய தலைப்புகளில் காயத்ரி, லாவண்யா, ஆசிகா, ஜெயந்தி, அட்சயா, தமயந்தி, சபியா சிரின், தீபிகா, கனிஷ்கர், லோகேஷ் குமார் ஆகிய மாணவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கள ஆய்வுகள் எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வரலாற்று நூல்களைப் படித்து மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவார்கள். அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு கரிகாலன் கண்ட காவிரிக்கரை நாகரிகம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்படும். பள்ளியில் படிக்கும் போதே மாணவர்கள் இது போன்ற ஆய்வுகளில் ஈடுபடுவது பிற்காலத்தில் அவர்கள் ஆராய்ச்சி சார்ந்த அறிவை மேம்படுத்தும்.

சேர, பாண்டியர் மற்றும் 11 வேளிர் குலத் தலைவர்களை வெண்ணிப் போரில் வென்றவன் கரிகாலன்.‌ அந்த வெண்ணிப் போர் நடந்த வெண்ணி நதிக்கரையில் இப்பள்ளி அமைந்திருப்பதால் கரிகாலன் ஆய்வு இருக்கையை தொடங்கி இருக்கிறோம் என்றார்.

ஆய்வு இருக்கையில் இடம்பெற்று ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆய்வுக் குழுத் தலைவருமான ஐரன்பிரபா பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in