Published : 05 Apr 2016 09:38 AM
Last Updated : 05 Apr 2016 09:38 AM

‘தி இந்து’ மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய விழா: ஆள்காட்டி விரலில் படரும் ‘மைதான் நமக்குப்பெருமை- ‘வாக்காளர் வாய்ஸ்’ நிகழ்ச்சியில் ஒலித்த குரல்

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ‘தி இந்து’ சார்பில் தேர்தல் ஜனநாயகத்தின் பெருமையைப் பேசும் 'வாக்காளர் வாய்ஸ்' மாணவர் திருவிழா கோவை குனியமுத்தூரில் உள்ள  கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ், எழுத்தாளர் கோவை சதாசிவம், கவிஞர் உமா மகேஸ்வரி,  கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எஸ்.அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

மதுராந்தகி (வருவாய் கோட்டாட்சியர்):

கோவையில் கிராமப்புறத்தில் 82- 85 சதவீதமும், நகர்ப்புறத்தில் 50 - 55 சதவீதமும் வாக்குகள் பதிவாகின்றன. அதை மேலும் அதிகப்படுத்தவே 100 சதவீத இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும்.

எஸ்.அண்ணாதுரை (கல்லூரி முதல்வர்):

18 - 24 வயதுக்குட்பட்ட 21 சதவீத இளம் தலைமுறை வாக்காளர்கள் இருந்தும் அவர்கள் வாக்குப்பதிவு குறைவாகவே இருக்கிறது. காரணம், அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. வாக்களிப்பதன் அவசியம் தெரிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். தகுதியுடைய அனை வரும் வாக்களிக்க வேண்டும்.

கோவை சதாசிவம் (எழுத்தாளர்):

தேர்தல் எனும் தேர்வில் நீங்கள் 100 சதவீதம் வாக்குரிமையை செலுத்தி நமக்கான தலைவர்களை தேர்வு செய்வதன் மூலம்தான் ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்ய முடியும். மக்களின் தெளிவான தீர்ப்பின்மையே அரசியலில் சாக்கடையை உருவாக் கியுள்ளது. அரசியலில் இருப்பவர் கள் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே. மீதமுள்ள 95 சதவீதம் பேர் வெளியே இருக்கிறார்கள். இவர்கள் நினைத்தால் சாக்கடையைத் தூய்மைப்படுத்தி நாற்றத்தை போக்கிவிடலாம். வாக்குரிமையை வாழ்வுரிமையாக நினைத்து வாக்களியுங்கள். உங்கள் விரல் நுனியில் இருந்து மாற்றம் தொடங்கட்டும்.

உமா மகேஸ்வரி (கவிஞர்)

நாட்டில் அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறாமல் இருக்கும்போது நமது வாக்குரிமையை எப்படி பயன் படுத்துவது என்பதை தெரிந்திருக்க வேண்டும். அனைவரது ஆள்காட்டி விரலில் மை படரும்போதுதான் நாம் பெருமையுடன் இங்கு வாழும் சூழல் உருவாகும். வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்தால்தான் இந்திய ஜனநாயகமும் எழுந்து நிற்கும். வீட்டிலிருந்தும் வாக்களிக்காமல் விட்டால் ஜனநாயகம் படுத்துவிடும். வாக்களிப்பதற்கு அனைவரும் சென்றால்தான் எல்லாமே கிடைக்கும் சமூகம் உருவாகும்.

சமஸ் (தி இந்து நடுப்பக்க ஆசிரியர்):

குடவோலை முறைத் தேர்தலுக்கும், இந்தியாவின் முதல் ஜனநாயகத் தேர்தலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என நினைப்பது தவறு. முதல் தேர்தலை நினைத்துப் பார்க்க வேண்டும். 1947-ல் காந்தியும், நேருவும் அனைவருக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்றபோது, மேற்கத்திய நாடுகள் இந்தியாவை பைத்தியக்கார நாடு என்றன. உள் நாட்டிலும் எதிர்ப்புகள் இருந்தன. அதுவரை ஒரு சிலருக்கு மட்டுமே இருந்த வாக்குரிமையை எழுத்தறிவில்லாத, தங்கள் பெயரைக்கூட தெரிந்து வைத்திராத மக்களுக்கும் பெற்றுத் தந்தது தேர்தல் ஆணையம். சுமார் 17.6 கோடி வாக்காளர்களுடன் சந்தித்த 1952 தேர்தலில் 62 சதவீத வாக்குகள் பதிவாகின. 1985 தேர்தலில் 64 சதவீதமும், 2014 தேர்தலில் 66 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. கல்வியறிவு பல மடங்கு பெருகினாலும், வாக்குகள் 4 சதவீதம்தான் அதிகமாகியுள்ளது. அதிருப்தியாளர்கள் தேர்தலை விலக்கினால், அரசியல் பிழைப்புவாதிகள் தேர்தலை தமதாக்கிக் கொள்வார்கள். வாக்குகளுக்கு விலை பேச தயாராக உள்ளனர். எனவே நாம் நம் வாக்குகளை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பது முக்கியம்.

நிகழ்ச்சியில், கோவைப்புதூரில் உள்ள  கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அ.ரமேஷ்,  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் கே.பழனியப்பன், முதல்வர் பி.பாபா ஞானகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் ‘பிளாஷ் மாப்’ எனப்படும் நடனத்தையும், என்.எஸ்.எஸ். மாணவ - மாணவிகள் தெருநாடகமும் நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில்  கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி,  கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ‘தி இந்து’ தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார். கோவை பதிப்பு தலைமை நிருபர் கா.சு.வேலாயுதன் நன்றி கூறினார்.

மூவர்ணக் கொடியுடன் மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

ச.கார்த்திகேயன் - மாணவர்

இளைஞர்களின் வாக்கு, சமூக மாற்றத்தை தோற்றுவிக்கும். தற்போதைய தேர்தல் என்பது மாற்றத்துக்கான தருணம். நமது வாக்குரிமையை எதற்காகவும், யாரிடமும் விற்கக் கூடாது. மாற்றம் முன்னேற்றம் ஒன்று மட்டுமே லட்சியமாக இருக்க வேண்டும்.

படித்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக வர வேண்டும். சமுதாய மாற்றத்தை யார் கொண்டு வருவார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

மதிவதினி - மாணவி

வாக்கு என்பது நமது கடமை மற்றும் உரிமை. யாராவது வாக்குக்காக காசு கொடுத்தால் வாங்கிவிடாதீர்கள். நமக்கான தலைவரை நாம் விருப்பப்படி தேர்வு செய்ய வேண்டும். ஜனநாயக கடமையான வாக்குரிமையை பயன்படுத்தி மாற்றத்தை உருவாக்குவோம்.

விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தியபடி…

நிகழ்ச்சியின்போது மாணவ, மாணவிகள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். நமக்கான ஜனநாயகத்துக்கு வாக்களிப்போம், வாக்களிப்பது நமது உரிமை, அதை விட்டுத் தர மாட்டோம், சுய விருப்பத்துடன் வாக்களிப்போம். எனது வாக்கு எனது எதிர்காலம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி ஏனைய மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மேலும், மாணவர்கள், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து ‘மே 16-ம் தேதி வாக்களிப்போம்’ என்ற பதாகையை ஏந்தியபடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x