

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்டகாலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு மறுவாய்ப்பு கிடைத்துள்ளது.
ராஜேந்திர பிரசாத்
ராஜேந்திர பிரசாத்துக்கு இம்முறை பத்மநாபபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் 2001-ம் ஆண்டு வெற்றி பெற்று, மீன் வளத்துறை அமைச்சராக இருந்தார். 2006-ல் இதே தொகுதியில் தோல்வி அடைந்தார். அதன்பின் கட்சியில் பொறுப்பு ஏதும் வகிக்கவில்லை. நீண்ட காலத்துக்கு பின் அரசியலில் `ரீஎன்ட்ரி’ கிடைத்துள்ளது.
தளவாய் சுந்தரம்
கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயன் வழக்கு தொடுத்தார். அப்போது விஜயன் தாக்கப்பட்டார். இவ்வழக்கில் அதிமுகவின் மூத்த நிர்வாகி ஆதிராஜாராம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் வந்த ராஜ்யசபா தேர்தலுக்கும் ஆதிராஜாராம் பெயரை பரிந்துரைத்தது அதிமுக தலைமை. இதற்கு வழக்கறிஞர்கள் குழாமில் இருந்து கடும் எதிர்ப்பலை.
அப்போது சென்னையில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் மாவட்டப் பொறுப்பில் இருந்தார் தளவாய் சுந்தரம். அதிமுக ஆதரவு வழக்கறிஞர்களைத் திரட்டி இதற்கு பதில் போராட்டம் நடத்திய தளவாய் சுந்தரத்தை, ராஜ்யசபா உறுப்பினராக்கியது அதிமுக தலைமை.
2001 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று பொதுப்பணித்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை ஆகிய அமைச்சர் பதவிகளை வகித்தார். கட்சியிலும் அமைப்புச் செயலாளராக இருந்தார். அதன் பின் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இவருக்கு, கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின், மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்தது. தற்போது, கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கே.டி.பச்சைமால்
குளச்சல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.டி.பச்சைமால், 2011-ல் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று, வனத்துறை அமைச்சரானார். மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரியில் அதிமுக அடைந்த படுதோல்வியால், அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்தார். தற்போது குளச்சல் தொகுதியை குறி வைத்தவருக்கு, அத்தொகுதியே தரப்பட்டுள்ளது. உற்சாகத்தில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
இதன்மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த 3 முன்னாள் அமைச்சர்களுக்கு தற்போது வெளியான வேட்பாளர் பட்டியல் மூலம் மறுபிறவி கிடைத்துள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.