Published : 16 Mar 2022 04:15 AM
Last Updated : 16 Mar 2022 04:15 AM

கோவையில் கடற்படையின் விரிவுபடுத்தப்பட்ட உள்நாட்டு உற்பத்தி மையத்தை அமைக்க நடவடிக்கை

தென்னிந்தியா முழுமைக்கும் கடற்படைக்கான உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் முழுமையான விரிவுபடுத்தப்பட்ட உள்நாட்டு உற்பத்தி மையத்தை கோவையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை துணைத் தளபதி ரியர் அட்மிரல் கே.ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்புத் துறைக் கான தேவையில் 68 சதவீதம் வரை உள்நாட்டு உற்பத்தி மூலமாக பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகம் மற்றும் கொச்சியில் உள்ள தென்னிந்திய கடற்படை தளத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கோவை தொழில் துறையினர் இடையிலான கலந்துரையாடல் கூட்டம் கோவை கொடிசியா அரங்கில் நேற்று நடைபெற்றது.

கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ் பாபு பேசும்போது, கோவையில் பாதுகாப்புத் துறைக்கான தளவாட உற்பத்தியில் தொழில் துறையினர் கொண்டிருக்கும் ஆர்வம் மற்றும் அதற்காக கொடிசியா எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், விமானப்படை, கொச்சியில் உள்ள கடற்படை பணிமனை உள்ளிட்ட அமைப்புகளுடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்தும் விளக்கினார்.

இதில் கலந்து கொண்ட டெல்லி கடற்படை தலைமையக தளவாடங்கள் பிரிவு உதவி தலைமை அதிகாரி (நவீனமயமாக்கல்) ரியர் அட்மிரல் கே.னிவாஸ் பேசும்போது, “கொடிசியா மற்றும் அதன் பாதுகாப்பு துறை சார்ந்த ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இந்திய கடற்படைக்கான பொருள் தேவைகளை உற்பத்தி செய்து வழங்க ஏராளமான வாய்ப்புகள் இங்கு உள்ளன. தென்னிந்திய அளவில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை உள்ளடக்கி கடற்படைக்கான உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் கோவையில் முழுமையான விரிவு படுத்தப்பட்ட உள்நாட்டு உற்பத்தி மையத்தை அமைக்க டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது” என்றார்.

கடற்படை அதிகாரிகள் மற்றும் கோவையைச் சேர்ந்த 25 உற்பத்தி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், கோவையில் உள்ள குறிப்பிட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரில் சென்ற கடற்படை அதிகாாிகள் உற்பத்தி பணிகளை பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x