

ஆண்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய தாளவாடி அருகே உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோயில் குண்டம் திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்துள்ள கொங்கஹள்ளி என்ற வனத்தில், மூன்று மலைகளுக்கு நடுவே, பாறை குகையில் ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி கோயில் அமைந்துள்ளது.
லிங்காயத்து பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இக்கோயிலில், 18 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பங்கேற்கும் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா 14-ம் தேதி ருத்ராபிஷேக பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, கிரிஜம்மா நந்தவனத் தோப்பில் இருந்து, சுவாமிக்கு அணிவிக்கக் கூடிய ஆபரணங்கள், மேள, தாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
குண்டம் திருவிழாவையொட்டி, பாறைக் குகையில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. கோயில் முன் அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில், ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப பூசாரி குண்டம் இறங்கினார்.
பூசாரியை தவிர பக்தர்கள் எவரும் குண்டம் இறங்கக்கூடாது என்ற ஐதீகம் இக்கோயிலில் பின்பற்றப்படுகிறது.
எனவே, பக்தர்கள் குண்டம் இறங்காமல், அதனைத் தொட்டு வழிபாடு செய்தனர். அதேபோல், மல்லிகார்ஜுனா சுவாமி பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டதால், இக்கோயிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்ற ஐதீகத்தின்படி பெண்கள் 2 கி. மீ தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அதன் பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புலி வாகனத்தில், மல்லிகார்ஜுன சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முனிவர் அவதாரத்தில் வரும் சுவாமியை பெண்கள் ஊருக்கு வெளியே உள்ள கிரிஜம்மா நந்தவனத் தோப்பில் வந்து வழிபட்டனர்.