Published : 16 Mar 2022 08:31 AM
Last Updated : 16 Mar 2022 08:31 AM
சென்னை: சென்னை ராணி மேரி மகளிர் கல்லூரி வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பில், டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், ஓய்வுபெற்ற வருமான வரி அதிகாரியும், எழுத்தாளரும், போட்டித் தேர்வுகள் பயிற்சியாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
அரசுப் பணியில் சேர விரும்புவோர் முதலில் அரசு, தேர்வாணையம், தேர்வுமுறை ஆகிய 3 விஷயங்கள் மீது முழுநம்பிக்கை வைக்க வேண்டும். அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். திட்டமிட்டுப் படித்தால் இதில் வெற்றி பெறலாம்.
போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு சமூக பின்புலம் அவசியமில்லை. தன்னம்பிக்கையுடன் தயாராவது முக்கியம். பாடங்களை கஷ்டப்பட்டு படிக்கக் கூடாது. இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். படிப்பது என்பது சந்தோஷமான விஷயம். சுகமான அனுபவம். எனவே, நிறைய படிக்க வேண்டும். அப்போது நமது பார்வை விரிவடையும்.
நேர்மையானவர்கள் அவசியம்
ஒருவர் அரசுப் பணிக்கு ஏன் செல்ல வேண்டும் என்பது முக்கியமான கேள்வி. என்னைப் பொறுத்தவரை, அடித்தட்டு மக்கள் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் அரசுப் பணியில் நுழையும்போது நேர்மையாகப் பணியாற்றுவார்கள். காரணம் சாதாரண மக்களின் வலிகளும், வேதனைகளும் அவர்களுக்கு நன்கு தெரியும். நேர்மையாளர்கள் அரசுப் பணிக்கு வரும்போது, அரசு நிர்வாகம் தூய்மையாகும்.
போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது என்பது கனவு கிடையாது. அது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ஒரு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்போது, அதை முழுமையாகப் படித்து, விவரங்களை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரித் தேர்ச்சிக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஆனால், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு அதுபோல குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்படாது. மொத்த காலி இடங்களும், சக போட்டியாளர்களின் மதிப்பெண்ணும்தான், தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்கும்.
போட்டித் தேர்வுக்குத் தயாராவதை சுமையாக இல்லாமல், சுகமானதாக கருத வேண்டும். கடினமாக உழைத்தால் நல்ல வேலைக்குச் செல்லலாம். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்கும். இவ்வாறு பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று, ராணி மேரி மகளிர் கல்லூரியில் உதவியாளராகப் பணியாற்றும் ஏ.அப்துல்கரீம், குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கினார். கல்லூரி முதல்வர் பி.உமா மகேஸ்வரி வரவேற்றார். வேலைவாய்ப்பு வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர்களான சமஸ்கிருத துறைத் தலைவர் எம்.உமா மகேஸ்வரி, தாவரவியல் துறைஉதவிப் பேராசிரியை ஏ.எம்.சபீதா ராணி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்த முகாமில் இளங்கலை இறுதியாண்டு மற்றும் முதுகலை மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT