Published : 16 Mar 2022 04:30 AM
Last Updated : 16 Mar 2022 04:30 AM

மதுரை சாலைகளை சீரமைக்க கவனம் செலுத்துவாரா மேயர்?: கால் நூற்றாண்டு பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்க்கும் மக்கள்

மதுரை மாநகரில் கடந்த கால் நூற் றாண்டாகவே சாலைகள், சுகாதாரம், குடிநீர், தெருவிளக்குப் பராமரிப்பு போன்ற அத்தியாவசியப் பணிகள் முடங்கியிருந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதிதாகப் பதவியேற்றுள்ள மேயர் மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதி யை மேம்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மதுரை மாநகர மேயராக இந்திராணி பதவியேற்றுள்ளார். மாநகரின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் அவரது தலையாயக் கடமையாக உள்ளது. ஒருநாள் மழைக்கே மதுரை மாநகரின் பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக மாறும் அவலத்துக்குத் தீர்வு காண்பது, சாலைகள், குடிநீர், தூய்மைப்பணிகள் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மேயரிடம் மக்கள் முன் வைக்கும் முதல் கோரிக்கை.

மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டிய சாலைகள் மாதக் கணக்கில் சீரமைக்கப்படாமல் மக்களையும், வாகன ஓட்டிகளையும் சொல்லொண்ணாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் 13 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளும், 74.4 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளும், 1,545 கி.மீ., மாநகராட்சி சாலைகளும் உள்ளன. இதில், 265 கி.மீ. கனரக, இலகுரக வாகனங்கள், சென்று வருகின்றன.1,253 கி.மீ.,குடியிருப்புச் சாலை களாக உள்ளன. ஒரு நகரின் வளர்ச்சிக்கு அதன் சாலைகள்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால், மதுரையில் அந்த அடிப்படையே சிதைந்துபோய் காணப் படுகிறது.

சமீபத்தில் 258 புதிய சாலைகள் ரூ.40 கோடியில் அமைப்பதற்காக பூமி பூஜைகள் போப்பட்டுப் பணிகள் தொடங்கின. ஆனால், பணிகள் எங்கே நடக்கின்றன என்று கேட்கக்கூடிய அளவில் நகரில் திரும்பிய பக்க மெல்லாம் சாலைகள் பயணிக்க முடியாத அளவுக்குப் படுமோசமாக இருக்கின்றன.

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் முதல் அப்போலோ வரையிலான வண்டியூர் கண்மாய் ஏரிச் சாலை முழுவதுமாக பல ஆண்டுகளாகச் சேதமடைந்துள்ளன. இந்த சாலையில் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வரும் கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், பஸ்கள் மற்றும் கார்கள் 24 மணி நேரமும் சென்று வருவதால் பரபரப்பாக இந்தச் சாலை காணப்படும்.

இந்தச் சாலையில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் இருப் பதால் ஆம்புலன்ஸ்கள் அதிகம் வந்து செல்கின்றன. ஆனால், சாலைகள் குண்டும், குழியுமாக உள் ளன. இந்தச் சாலையில் செல்லும் வாக னங்கள் ஊர்ந்தும், குழிகளில் ஏறி இறங்குவதால் ஆடி அசைந்தபடி செல்கின்றன. சாலையின் நடுவில்தான் பயணிக்க முடியாது என்றால் ஓரமாக மாநகராட்சியால் பல்வேறு பணி களுக்காக தோண்டிய குழிகளை சரிவர மூடாமல் சென்றுள்ளனர். அதனால், சாலையோரமும் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியவில்லை.

மண், மணல், கற்கள் குவிந்து கிடப்பதால் சாலையோரம் மறந்தும் வாகனத்தைவிட்டால் விபத்துதான். மழைக்காலத்தில் சாலையின் நடுவில் உள்ள பள்ளங்களில் மழைநீரும், ஓரங் களில் சேறும், சகதியுமாக உள்ளன. அதுபோல், மதுரை அரசு மருத்துவமனை பனகல் சாலை விசாலமாக இருந்தாலும், சாலையின் இரு புறமும் தனியார் ஆம்புலன்ஸ்கள், ஷேர் ஆட்டோக்கள், கனரக வாகனங்களை நிறுத்துவதால் இந்தச் சாலையில் போக்குவரத்து நிரந்தரமாகவே பாதிக்கப்படுகின்றன.

அதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ், பணியாளர்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு வர முடியாமல் திண்டாடுகின்றனர்.

கே.கே.நகர் 80 அடி சாலையில் எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் தொடங்கி வைகை ஆறு வரை செல் லும் சாலை முழுவதும் குண்டும், குழி யுமாக காணப்பட்டது. தற்போது அந்த சாலையைப் புதிதாகப் போடாமல் தற்காலிகமாக பள் ளங்களில் ஒட்டு வேலை மட்டும் பார்க்கப்பட்டுள்ளன. அதனால், தற் போதைக்கு அந்த சாலை புதிதாகப் போட வாய்ப்பில்லை. அதுபோல், சிம்மக்கல் சாலை, எல்லீஸ் நகர் சாலையில் நடுவில் பாதாள பள்ளங்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. வாகனங்களும் சேதமடைகின்றன.

இந்தச் சாலைகளைப் போன்றுதான் நகரின் சாலைகள் அனைத்தும் மிக மோசமாக போக்குவரத்துக்கு லாயக் கற்றநிலையில் உள்ளன. பெரும் பாலான சாலைகள், மிக குறுகலாக இருப்பதால் அந்தச் சாலைகளில் ஒரு இடத்தில் ஆட்டோ, லாரிகளை நிறுத் துவதால் அதன்தொடர்ச்சியாக தொடர் புடைய அனைத்து சாலைகளிலும் போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது. சாலையோரங்களில் தனியார் ஆக்கி ரமிப்பும், தள்ளுவண்டிக் கடைகள் ஆக்கிரமிப்பும் பெருகிவிட்டதால் நடை பாதைகளைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி யுள்ள சாலைகள் மட்டுமில்லாது நகரின் அனைத்துச் சாலைகளிலும் அமைந் துள்ள வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களில் வாகன காபக்க வசதி இல்லை. அதனால், அந்த நிறுவனங்கள், மண்டபங்களுக்கு வரும் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் அந்தச் சாலைகளை வாகன ஓட்டிகள் கடந்து செல்வது பெரும் சிரமமாக உள்ளது.

போக்குவரத்து நெரிசலைச் சரி செய்ய மாநகர போக்குவரத்து போலீஸார், நகரச் சாலைகளில் அருகருகே தானியங்கி சிக்னல்கள் அமைத்துள்ளனர். அதனால், சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத் திருக்கும் நேரம் அதிகரிக்கிறது.

மதுரை மாநகராட்சி சுற்றுலாவையும், மருத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டே அதன் வர்த்தகமும், வரு மானமும் அமைந்துள்ளது. ஆனால், தற்போது நகரச் சாலைகளில் இந்த இரு துறைகளும் வளர்ச்சி கேள்விக் குறியாகிப்போனது. அதனால், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி மேயர் தனது முதல் நடவடிக்கையாக மாநகரின் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி நகரச் சாலைகளில் தடையில்லா போக்கு வரத்தை ஏற்படுத்துவதே அவர் முன் நிற்கும் முதல் சவாலாக உள்ளது.

மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாநகர சாலைகளைப் பராமரிக்கும் பொறியாளர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு நகரின் நகரின் பிரதானச் சாலைகள், மையப்பகுதி சாலைகளை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் தரநிலை அடிப்படையில் சிறந்த தரத்துடன் சீர மைக்க நடவடிக்கை எடுப்பதோடு நகரச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என் பதே மேயரிடம் மதுரை நகர் மக்கள் முன்வைக்கும் தலையாயக் கோரிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x