

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 இடங்களில் நடக்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ம் தேதியும் நடக்கிறது. சென்னை மாவட்டத் துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணு வதற்காக பரிந்துரைக்கப்பட்ட இடங்களை சென்னை மாவட்ட தேர் தல் அலுவலர் பி.சந்திரமோகன், மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரமோகன் கூறியதாவது:
சென்னை மாவட்டத்தில் மொத் தம் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் சைதாப்பேட்டை, தி.நகர், விருகம்பாக்கம், மயிலாப் பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதி களில் பதிவாகும் வாக்குகள் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் எண்ணப்படும். ஆர்.கே.நகர், துறைமுகம், திருவிக நகர், ராயபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ராணிமேரி கல்லூரியில் எண்ணப்படும். பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் லயோலா கல்லூரியில் எண்ணப்படும்.
மேற்கண்ட 3 மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. அப்பணிகளை ஆய்வு செய்தோம். வாக்கு எண்ணும் கூடம், ஊடக மையம், பாதுகாப்பு அறைகள், வாக்குப் பெட்டி வைக்கும் அறை அமைப்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறும்போது, ‘‘தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வாக்கு எண்ணும் அனைத்து மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். வாக்குப்பெட்டிகள் வைக்கும் அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவை வீடியோ மூலம் கண்காணிக்கப்படும்’’ என்றார்.