Published : 06 Apr 2016 11:41 AM
Last Updated : 06 Apr 2016 11:41 AM

மதுரை அதிமுகவில் 6 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு: அமைச்சர் தரப்பினர் மகிழ்ச்சி; மேயர் தரப்பினர் அதிர்ச்சி

மதுரை மாவட்ட அதிமுகவில் தற்போதைய எம்எல்ஏக்கள் 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மதுரை மாவட்ட அதிமுகவில் 10 தொகுதிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில், மதுரை மாவட்டத்தில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக இருந்த 6 பேரில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு (மதுரை மேற்கு) ஒருவருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், அமைச்சர் தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எம்எல்ஏக்களாக இருக்கும் சாமி (மேலூர்), தமிழரசன் (கிழக்கு), முத்துராமலிங்கம் (திருமங் கலம்), ஏ.கே.போஸ் (வடக்கு), கருப்பையா (சோழவந்தான்) ஆகி யோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதுபோல், அதிமுகவில் சேர்ந்த மதுரை மத்திய தொகுதி தேமுதிக எம்எல்ஏ சுந்தர்ராஜனுக்கு மீண்டும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. சக கட்சி நிர்வாகிகளை மதிக்காதது, பொது நிகழ்ச்சியில் தடாலடியாக பேசி சர்ச்சைகளில் சிக்கியதால், திருமங்கலம் எம்எல்ஏ முத்துராமலிங்கத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, புறநகர் மாவட்டச் செயலர் பதவி பறிப்பு, தற்போது சீட் வழங்கா ததால் முத்துராமலிங்கம் கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரி வித்தனர்.

எந்த கோஷ்டியிலும் சேராமல் அமைதியாக அரசியல் செய்து வந்த எம்.எஸ்.பாண்டியனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவர் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர். சிறிது காலம் மாவட்ட செயலராகவும் இருந்தவர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா புறநகர் மாவட்ட செயலராக சமீபத்தில் பொறுப்பேற்றதால் அவருக்குத்தான் சீட் எனக்கூறப்பட்டு வந்தது. கடைசி நேரத்தில் சீனியர் சீனிவேலுக்கு திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போட்டியிட அதிர்ஷ்டம் தேடி வந்தது. புறநகர் மாவட்ட செயலராக இருக்கும் வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கு வாய்ப்பு வழங்காமல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திருமங்கலத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி புறநகர் மாவட்டத்தில் அவரின் கை ஓங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வி.வி.ராஜன் செல்லப்பா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுவரை மேயர் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக பேச்சு நிலவியதால் இங்கு போட்டியிட யோசித்த திமுக, தற்போது இந்த தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சோழவந்தான் தொகுதியில் கட்சியில் சாதாரண நபரான புறநகர் மாணவர் அணிச் செயலர் மாணிக்கத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரிங் ரோடு மஸ்தான்பட்டியில் ஜெயலலிதா பேசிய பொதுக்கூட்டங்கள் இவருக்குச் சொந்தமான இடத்தில்தான் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு இடம் கொடுத்ததை சொல்லியே இவர் சீட் பெற்றுவிட்டதாக கட்சியினர் கூறுகின்றனர்.

உசிலம்பட்டியில் கடந்த தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நீதிபதி. கடைசி நேரத்தில் பார்வர்டு பிளாக் கதிரவனுக்காக இந்த தொகுதி விட்டுக் கொடுக்கப்பட்டதால் நீதிபதி ஏமாற்றமடைந்தார். தற்போது அந்த அனுதாபத்தில் இவருக்கு சீட் வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலூர் எம்எல்ஏ சாமிக்கும், தொகுதி நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட கோஷ்டி மோதலே அவருக்கு சீட் கிடைக்காத காரணம் எனக்கூறப்படுகிறது. அதனால், இந்த தொகுதியில் சாதாரண நபரான ஆ.வலையபட்டி பஞ்சாயத்து தலைவராக இருக்கும் பெரிய புள்ளானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மதுரை 73-வது வார்டு கவுன்சிலர், அப்பகுதி வட்டச் செயலர் எஸ்.எஸ்.சரவணனுக்கு மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவர் சவுராஷ்டிர சமூகத்தை சேர்ந்தவர். இந்த தொகுதியில் நீண்டகாலமாக இந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் பிரதிநிதித்துவம் வழங்க ப்படாமல் இருந்தது. தற்போது அவர் களுக்கு ஒரு தொகுதி கொடுத்தாக வேண்டும் என்பதால் சரவணனுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் சீனி யர்கள் பலர் இருக்கும் நிலையில், சரணவனுக்கு வாய்ப்பு வழங்கியதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மொத்தத்தில் மாவட்டத்தில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 7 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலர் தேர்தலில் தோல்வி அடைந்தவருக்கு சீட்

மதுரை மத்திய தொகுதியில் மா.ஜெயபால் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர், கடந்த மாநகராட்சி 10-வது வார்டு தேர்தலில் திமுக கவுன்சிலர் கொடவீடு அருண்குமாரிடம் தோல்வி அடைந்தார். கவுன்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த இவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதால், இத்தொகுதி நிர்வாகிகள் விரக்தி அடைந்துள்ளனர். மதுரை கிழக்கு தொகுதியில் தக்கார் பி. பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு ஒன்றியச் செயலராக உள்ளார். இவரது மனைவி பாண்டீஸ்வரி ஒன்றியத் தலைவராக உள்ளார். மனைவிக்கும், கணவருக்கும் ஒரே நேரத்தில் கட்சிப்பதவி, உள்ளாட்சி பதவி வழங்கியதுடன் தற்போது கணவருக்கு எம்எல்ஏ சீட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x