

மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே ஆர்.தியாகராஜன், தமாகாவிலிருந்து விலகிய மயிலை சத்யா, சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாப்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரம் சேமியர்ஸ் சாலையில் உள்ள மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கராத்தே தியாகராஜன் நேற்று மதியம் 12.30 மணியளவில் தேர்தல் அலுவலர் அமிர்த ஜோதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், “நான் 20 வயது முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். மயிலாப்பூர் தொகுதியில் அனைவரையும் கடந்த 30 ஆண்டு காலமாக நன்றாக அறிவேன். மயிலாப்பூர் தொகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக நான் உள்ளேன்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ் மக்கள் எளிதில் அணுக முடியாதவராக உள்ளார். அவர் டிஜிபி யாக இருந்தபோது, பத்திரிகை யாளர்களைக் கூட பார்க்க மாட்டார். ஆனால், நான் அப்படியில்லை. எனவே, நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என்றார்.
மயிலை சத்யா
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த மயிலை சத்யா, தனக்கு சீட் கொடுக்காததால் அந்த கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறி மகாகவி பாரதியார் மக்கள் கட்சி என்னும் கட்சியை தொடங்கினார். இந்நிலையில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பாரதியார் வேடமணிந்த நூற்றுக்கணக்கான சிறுவர்களை மாட்டு வண்டியில் ஏற்றி, அவர்களுடன் ஊர்வலமாக வந்து மயிலை சத்யா வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதே போல், மக்கள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் அதன் நிறுவனத் தலைவரும், சமூக ஆர்வலருமான டிராஃபிக் ராமசாமி மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார். மயிலாப்பூரில் போட்டியிடுவது குறித்து டிராஃபிக் ராமசாமி கூறும்போது, “நான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தேன். பெங்களூருவைச் சேர்ந்த சில என்ஜிஓ-க்கள் நான் மயிலாப்பூர் தொகுதியில் நிற்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதன் காரணமாகவே நான் தேர்தலில் நிற்கிறேன். அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக நான் தேர்தலில் நிற்கிறேன். தேர்தல் ஆணையம் தனது பணிகளை ஆளுங்கட்சிக்கு பயந்து பயந்து செய்கிறது” என்றார்.