

கரூர் அருகே அய்யம்பாளை யத்தில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடத்திய சோதனையில் ரூ.4.77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தொகை குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூர் அருகேயுள்ள அய்யம் பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பு நாதன் (45). அதிமுக பிரமுகரான இவரது குடோன் அப்பகுதியில் உள்ளது. அங்கு, தேர்தல் தொடர்பான பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் பார்வையாளர் ஷில்ஆசிஸ், எஸ்.பி. வந்திதா பாண்டே, வருமான வரித் துறை இணை இயக்குநர் மணிகண்டன் தலைமையில் வருமான வரித் துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர்.
இதில், ரூ.10,33,820 ரொக்கம் மற்றும் 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் இயந்திரம், வாக்காளர் பட்டியல் ஆகிய வற்றைப் பறிமுதல் செய்து அரவக்குறிச்சி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வருமான வரித் துறை இணை இயக்குநர் மணிகண்டன் தலைமையிலான வருமான வரித் துறை அலுவலர் கள் மற்றும் பறக்கும் படையினர் அன்புநாதனின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய சோதனை மேற்கொண்டனர். வருமான வரித் துறையினர் விடிய, விடிய தொடர்ந்து நடந்திய சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் வழக்கு பதிவு
இந்நிலையில், அரசு சின்னம், பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அன்புநாதன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்புநாதனின் குடோனில் நிறுத்தப்பட்டிருந்த அவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸில், “தேசிய சுகாதார இயக்கம், கவர்ன்மென்ட் ஆப் இந்தியா” என எழுதப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெகதீசன் வேலாயுதம்பாளையம் போலீஸில் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில், அரசு சின்னங்கள், பெயர் ஆகிய வற்றைத் தவறாகப் பயன்படுத்து வதைத் தடுக்கும் 1950-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அன்புநாதன் மீது வழக்கு பதிவு செய்து, ஆம்புலன்ஸை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான த.பொ.ராஜேஷ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அய்யம்பாளையம் அன்பு நாதன் குடோனில் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அவர் களுக்கு துணையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 குழுக்கள் சோதனை பணியில் ஈடுபட்டன. சோதனையில் ரூ.10,33,820 ரொக்கம், 11 பணம் எண்ணும் இயந்திரங்கள், கள்ள நோட்டை கண்டறியும் இயந்திரம், 4 கார்கள், 1 டிராக்டர், 1 ஆம்புலன்ஸ், வாக்காளர் பட்டியல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து அன்புநாத னின் வீட்டில் நேற்று முன்தினம் இரவும், இன்று (நேற்று) காலையும் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4.77 கோடி ரொக்கம் இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது. குடோனில் இருந்த ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் ஒரு குடோனில் சோதனை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மணிமாறன்(45) என்பவருக்குச் சொந்தமான அதியமான்கோட்டையில் உள்ள குடோனில் கடந்த சில நாட்களாக தேர்தல் தொடர்பான பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் வருமான வரித் துறை ஆய்வாளர் நடராஜன், பறக்கும் படை அலுவலர் வெங்கடாசலம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் துரைமுருகன், மண்மங்கலம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று சோதனை மேற்கொண்டனர். ஆனால், இங்கு பணம், பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அய்யம்பாளையத்தில் அதிமுக பிரமுகரின் குடோனில் நேற்று முன்தினம் சோதனை நடந்த நிலையில் நேற்று இங்கு சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.