கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் கட்டண வசூலின்றி பயணிக்கும் வாகனங்கள் - சம்பள நிலுவையால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கள்ளக்குறிச்சி டோல்கேட்டில் கட்டண வசூலின்றி பயணிக்கும் வாகனங்கள் - சம்பள நிலுவையால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூரில் பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், வாகனங்கள் கட்டண வசூலின்றி பயணிக்கின்றன

சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூரில் சுங்கச்சாவடி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 67 பேர் பணிபுரிந்து வந்தனர். இங்கு ஒப்பந்ததாரர் மாற்றம் செய்யப்பட்டதால், ஊழியர்களைக் குறைக்க புதிய ஒப்பந்ததாரர் முயன்றுள்ளார். இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனால் அந்த 67 பேரும் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இன்று அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தானியங்கி கட்டண வசூல் இயந்திரத்தையும் நிறுத்திவிட்டு, ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் வாகனங்கள் கட்டண வசூலின்றி பயணிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏஐடியுசி டோல்கேட் ஊழியர் சங்கத்தின் செயலாளர் கார்ல்மார்க்ஸ் கூறுகையில், "ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டதால் டோல்கேட் நிர்வாகங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த டோல்கேட்டில் 67 பேர் பணிபுரிந்து வந்த நிலையில், 40 பேர் மட்டும் போதும் என்று கூறி, மற்றவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் நிர்வாகம் இறங்கியுள்ளது. சில நிபந்தனைகளை விதித்து அதில் கையெழுத்திட்டால் தான் ஊதியம் வழங்கமுடியும் என நிர்ப்பந்தம் செய்வதால், கையெழுத்திடாத ஊழியர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்ததாரர் மாறும் போது, ஏற்கனவே பணியாற்றிய அதே ஊழியர்களைக் கொண்டு சுங்கச்சாவடியை இயங்க வேண்டும் என தமிழக தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை அலட்சியப்படுத்தும் வகையில் டோல்கேட் நிர்வாகம் செயல்படுகிறது. வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படாததால், தொடர் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைத் தொடர்பாக சுங்கச்சாவடி நிர்வாக மேலாளர் பெராராவை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் பேச முன்வரவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in