

சென்னை: தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேளாண்நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல்செய்யப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்டம்தோறும் விவசாயப் பிரதிநிதிகளின் கருத்துகளை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரிலும், காணொலி வாயிலாகவும் கேட்டு வருகிறார்.
இதற்கிடையே, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள வேளாண் கூட்ட அரங்கில், மாநில அளவில் பல்வேறு விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக இதுவரை 15 மாவட்ட விவசாயிகளிடம் காணொலிவாயிலாகவும், 7 மாவட்டங்களில் நேரடியாகவும் என 250 விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்கேற்ப நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முயற்சியின் காரணமாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 6 லட்சம்ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 53 லட்சம் ஏக்கரில்நெல் பயிரிட்டு சாதனை படைத்துள்ளோம். கடந்த ஆண்டைவிட நெல்உற்பத்தி இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால், அதிக அளவில் நெல்கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் வணிகர்கள் தலையீடு இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லுக்கு ரூ.50 கரும்புக்கு ரூ.150 கூடுதலாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.