

சென்னை: மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தொடக்கக் கல்வி துறைக்கு வட்டாரக் கல்வி அதிகாரிகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 95 பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சமூக, பொருளாதார அடிப்படையிலான அரசின் நலத் திட்டங்களை வழங்கும் நோக்கில்தான் பள்ளிகளில் சாதி விவரம் கேட்கப்படுகிறது. தவிர, சாதி விவரத்தை சொல்வது கட்டாயம் அல்ல. விருப்பம் இல்லாவிட்டால், சொல்ல வேண்டாம்.
அதேபோல, மாணவிகளிடம் மாதவிலக்கு பற்றிய விவரங்கள் கேட்கப்படுவதையும் சர்ச்சை ஆக்குகின்றனர். மாணவிகளின் உடல்நலம் தொடர்பாக சுகாதாரத் துறை பல்வேறு விவரங்களை கேட்கிறது. அதற்காகவே அதுபற்றிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. இனிமேல் இத்தகைய விவரங்கள் கேட்பது தவிர்க்கப்படும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை எந்த வகையிலும் தமிழக அரசு எடுத்துக்கொள்ளவில்லை. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புதிய திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறோம். 3-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு, குலக்கல்வி முறை, இருமொழிக் கொள்கை பிரச்சினை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.