கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலையில் 6 பேருக்கு இரட்டை ஆயுள்: நாமக்கல் நீதிமன்றம் தண்டனை

கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலையில் 6 பேருக்கு இரட்டை ஆயுள்: நாமக்கல் நீதிமன்றம் தண்டனை
Updated on
1 min read

நாமக்கல்: பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கொலை வழக்கில், 6 பேருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சி.வேலுச்சாமி. இவர் அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.

இச்சூழலில் கடன் பெற்ற தொழிலாளியின் மகளை கந்து வட்டிக்கும்பல் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து அதைவீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டது. இதையறிந்த வேலுச்சாமி கடந்த 2010-ம் ஆண்டு பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பும்போது அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக பள்ளிபாளையம் போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி பள்ளிபாளையத்தைச் சேர்ந்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த சிவகுமார், பூபதி, ராஜேந்திரன், மிலிடரி கணேசன், அருண்குமார், அன்பழகன், ஆமையன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைமுடிந்த நிலையில் நேற்று தீர்ப்புஅளிக்கப்பட்டது. இதன்படி சிவகுமார், மிலிடரி கணேசன், அருண்குமார், அன்பழகன், ராஜேந்திரன், பூபதி ஆகிய 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலாரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய ஆமையன் வழக்கு விசாரணையின்போது கொலை செய்யப்பட்டார். தண்டனை பெற்ற பூபதி தலைமறைவாக உள்ளார். சிவகுமார், பாலியல் வன்ெகாடுமை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in