

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வி.எம்.சி மனோகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திமுக கூட்டணியில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக கவுன்சிலர் பி.பாலசுப்பிரமணியத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், திமுகவினர் வேறு ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைத்ததுடன், துணைத் தலைவர் தேர்தலிலும் சுயேச்சை கவுன்சிலர் யுவராஜை வெற்றி பெற செய்தனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த யுவராஜ், 6-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில், அதிமுக ஆதரவோடு காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியின் சார்பில் துணைத் தலைவர் பதவியை யுவராஜ் பெற்றுள்ளதை ஏற்க முடியாது. அவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இல்லை. துணைத் தலைவர் பதவியை யுவராஜ் ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.