ஈரோடு நேதாஜி சந்தையில் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலைக் கண்டித்து காய்கறி மாலை அணிந்து மனு அளித்த வியாபாரிகள்
நிர்ணயிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு நேதாஜி காய்கறிச்சந்தை வியாபாரிகள் காய்கறி மாலை அணிந்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், நேதாஜி தினசரி காய்கறிச்சந்தை வியாபாரிகள் சிலர், கழுத்தில் காய்கறி மாலை அணிந்து வந்து, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது;
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் நேதாஜி காய்கறிச்சந்தையில், காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக்காட்டிலும் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, சுங்கக் கட்டண ரசீதில் இருந்த தொகையை சிறிது காலம் குத்தகைதாரர் வசூல் செய்தார்.
தற்போது மீண்டும் சுங்கக் கட்டண ரசீது கொடுக்காமல், அதிக பணம் வசூல் செய்யத் தொடங்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வியாபாரிகளை, கடைகளைக் காலி செய்யுமாறு மிரட்டுகிறார்.
இந்நிலையில் வரும் 16 -ம் தேதி நடக்கயிருக்கும் ஏலத்திற்கு முன் பணமே ரூ.1 கோடி என்ற அளவில் நிர்ணயமாவதால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவ்வளவு தொகை செலுத்தி ஏலம் எடுத்தால், சுங்கக் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிப்பது தவிர்க்கமுடியாததாகி விடும். எனவே, மாநகராட்சி நிர்வாகமே, சுங்கக்கட்டணத்தை நிர்ணயம் செய்து, அவர்களே வசூல் செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
