Published : 30 Apr 2016 02:03 PM
Last Updated : 30 Apr 2016 02:03 PM

தமிழகம் தேசவிரோத சக்திகளின் இருப்பிடம்: கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், இப்போது தேச விரோத சக்திகளின் இருப்பிடமாக உள்ளது என்று சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக, திமுக ஆகியவை தமிழகத்தை 50 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டன. திராவிட கட்சிகளின் ஆட்சியில், தமிழக மக்களின் வருமானம் குறைந்து ஏழைகளாகி வருகின்றனர். மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்க எவரும் வருவதில்லை. தமிழக அரசு மக்களை ஏமாற்றி, டாஸ்மாக் கடைகள் மூலமாக வருமானம் ஈட்டி வருகிறது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம், இப்போது தேச விரோத சக்திகளின் இருப்பிடமாக உள்ளது. அதற்கு உதாரணம் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை.

வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுத்தால், அது 5 ஆண்டுகளில் கொள்ளையடித்த பணத்தை கொடுப்பதாகவே அர்த்தம். மேலும், மக்களிடம் அக்கட்சி நம்பிக்கை இழந்துவிட்டதையே அது காட்டும். கெயில் விவகாரத்தில், கர்நாடகா, கேரளாவை போல, தமிழத்திலும் விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்காமல் இருப்பதற்காக, இத்துறை சார்ந்த அமைச்சகங்கள் மூலமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் இருந்து பாஜக-வுக்கு ஒரு எம்பி மட்டுமே தேர்வாகி இருந்தாலும், ஸ்மார்ட் சிட்டியில் 12 நகரங்கள், குளச்சலில் துறைமுகம் அமைக்க ரூ.24 ஆயிரம் கோடி, சென்னை-பெங்களூரு இடையே சாலையோர தொழிற்பேட்டை என பல்வேறு திட்டங்களை தமிழகத்துக்கு பாஜக செய்துள்ளது.

தமிழக மக்களுக்காக பாஜக மேலும் பல திட்டங்களை செய்யும். கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருந்தபோதுதான், திருவள்ளுவர் சிலை பெங்களூருவில் திறக்கப்பட்டது. எனவே, தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு சேலத்திலும், ஸ்மிருதி இரானி சென்னையிலும் நாளை (இன்று) பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். பாஜக தலைவர் அமித் ஷா 4-ம் தேதியும், பிரதமர் மோடி 6-ம் தேதியும் தமிழகம் வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தமிழக பாஜக வர்த்தகப் பிரிவு மாநில தலைவர் நரசிம்மன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x