

தருமபுரி மாவட்டத்தில், ‘டைமிங்’ பிரச்சினை விவகாரத்தில் பயணிகளின் உயிருடன் விளையாடும் வகையில் இயக்கப்படும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் இருந்து சேலம், மேட்டூர், கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், மாரண்ட அள்ளி, பென்னாகரம், ஏரியூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகிறது. பேருந்து ஓட்டுநர்களில் சிலரிடை யே அவ்வப்போது, ‘டைமிங்’ பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்படுவது வழக்கம். தகராறின் நீட்சியாக, பயணிகளின் உயிர்களுடன் விளையாடும் வகையில் சில ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கும் சம்பவங்கள் அவ்வப் போது நடைபெறுகிறது. இதுபோன்ற அலட்சிய செயல்பாடு களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சந்திரன் என்பவர் கூறுகையில், ‘பேருந்துகளுக்கான, ‘டைமிங்’ பிரச்சினை என்பது இரு அரசுப் பேருந்துகள் அல்லது இரு தனியார் பேருந்துகள் அல்லது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆகியவற்றின் ஓட்டுநர், நடத்துநர்கள் இடையே ஏற்படுவது. பேருந்து நிலையத்தில் அந்தந்த பேருந்துகளுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் பயணிகளை ஏற்றிக் கொண்டு நகர்ந்து விட வேண்டும். இதில், திட்டமிட்டோ அல்லது வேறு காரணங்களாலோ ஒரு பேருந்து கிளம்ப ஓரிரு நிமிடங்கள் தாமதமாகும்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இந்த டென்ஷனை ஈகோ பிரச்சினையாக மாற்றி மனதில் ஏற்றிக் கொண்டு, அந்த ட்ரிப் முடியும் வரை பேருந்தை சாகச வாகனம்போல் சில ஓட்டுநர்கள் இயக்குகின்றனர்.
அந்த வரிசையில், கடந்த 13-ம் தேதி முற்பகலில் சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றுக்கும், தனியார் பேருந்து ஒன்றுக்கும் இடையே ‘டைமிங்’ பிரச்சினை. தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அந்த அரசுப் பேருந்து நின்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தது.
அப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி அனுப்ப சாலையில் காவல்துறையால் நிரந்தரமாக, ‘பேரிகார்டு’ தடுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, அரசுப் பேருந்தை அதீத வேகத்தில் விரட்டி வந்த தனியார் பேருந்து ஓட்டுநர், நின்றிருந்த அரசுப் பேருந்தின் இடப்புறம் 1 அடிக்கும் குறைவான இடைவெளியுடன், தான் ஓட்டிவந்த பேருந்தை நிறுத்தினார்.
அந்த சில நொடிகள் 2 பேருந்துகளிலும் இருந்த பயணிகள் திகைப்பும், அதிர்ச்சியும் அடைந்து பதறினர். இதற்கிடையில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இடை யே சுமார் 5 நிமிடங்கள் வரை நீடித்த வாக்குவாதம் பேருந்து பயணிகளின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. அந்த குறுகிய நேரத்திற்குள்ளாக தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பேருந்துகளுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
பேருந்து பயணிகளின் உயிர்கள் குறித்து அக்கறை இன்றியும், சொந்த பிரச்சினைகளுக்காக தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்துக்கு தடை ஏற்படுத்துகிறோம் என சிறிதும் குற்ற உணர்வு இல்லாமலும் செயல்படும் இதுபோன்ற ஓட்டுநர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு சட்டம் சார்ந்த நிரந்தர கடிவாளங்களை ஏற்படுத்த வேண்டும். மேலும், இவ்வாறான ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை மூலம் போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.