Published : 15 Mar 2022 07:39 AM
Last Updated : 15 Mar 2022 07:39 AM

மாலை நேர பல்துறை சிறப்பு மருத்துவ சேவை: 40 இடங்களில் சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியது

சென்னை மாநகராட்சி சார்பில் மாலை நேர சிறப்பு மருத்துவ சேவை திட்டத்தின்கீழ் பெருங்குடி மண்டலம், பாலவாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்.

சென்னை: சென்னையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 40 இடங்களில் மாலை நேர பல்துறை சிறப்பு மருத்துவ சேவையை (Poly Clinic) மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பொது மருத்துவம் மற்றும் கர்ப்பிணிகள் நலம், குழந்தைகள்நலம் போன்ற புறநோயாளிகளுக்கானசேவைகள் காலை 8 முதல் மாலை 3மணி வரை வழங்கப்படுகிறது. சிறப்பு மருத்துவ வசதி பெற வேண்டுமெனில் அரசுபொது மருத்துவமனைகளுக்கே நோயாளிகள் செல்ல வேண்டும்.

மாலை நேரங்களில் மருத்துவரிடம் செல்லும் பழக்கம் சென்னை மாநகர மக்களிடம் அதிகமாக உள்ளது. அந்த நேரத்தில் மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கிடைக்காதது மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகள் இல்லாதது போன்ற குறைபாடுகள் தனியார் மருத்துவமனைகள், ஆலோசனை மையங்களுக்கு சாதகமாக இருந்தது. அங்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின்கீழ், மாலை நேர பல்துறை சிறப்பு மருத்துவ சேவை வழங்கும் மையங்களை கடந்த 2018-ம் ஆண்டு மாநகராட்சி திறந்தது. இது ஏழை மக்களுக்கு பேருதவியாக இருந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச்சில் இந்த மையங்கள் மூடப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பல்துறை சிறப்பு மருத்துவ சேவைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி மருத்துவமனைகளில் 40 இடங்களில் இந்தமாலை நேர சிறப்பு மருத்துவ சேவைமையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவை மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை இயங்கும். வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு மருத்துவர் (அரசு அல்லது தனியார் அல்லது ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்) வருகிறார். அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை மதிப்பூதியம்வழங்கப்படுகிறது. இம்மையங்களில் பொதுமருத்துவம், குழந்தைகள் நலம், மகளிர்மருத்துவம், பல், கண், தோல், காது,மூக்கு, தொண்டை மருத்துவம், மனநலம்,ஆர்த்தோ, பிசியோதெரபி ஆகிய சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இதற்கு முன்பு 36 மையங்களில் இந்தசேவை வழங்கப்பட்டது. இப்போது 40 இடங்களில் வழங்கப்படுகிறது. ஒருசிலஇடங்களில் இருவிதமான மருத்துவர்களும் சேவை வழங்குகின்றனர். சிறப்பு மருத்துவர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. விரைவில் அனைத்து மையங்களிலும் ஒரு நாளில் இரு வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அருகில் எந்த இடத்தில் பாலி கிளினிக் சேவை கிடைக்கிறது, எந்த நாளில் எந்தெந்த சிறப்பு மருத்துவர்கள் வருகிறார்கள் போன்ற விவரங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தகவல் பலகையில் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இந்த சேவை தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த ஜெயந்தி கூறும்போது, ‘‘எனது குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். தனியார் குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்றால் ரூ.200 ஆலோசனை கட்டணமும், மருந்துக்கு ரூ.200 வரை செலவாகும். இந்த மாலை நேர மருத்துவமனையால், குழந்தைகள் நல மருத்துவர்மூலம் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர்மருத்துவரிடம் உடல் நல தொடர்பாகவும் ஆலோசனை பெற்றேன். உண்மையில் இது என்னைப் போன்ற ஏழை மக்களுக்கு வரப்பிரசாதம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x