

ஸ்ரீபெரும்புதூர்: திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி பதவியை ராஜினாமா செய்யாமல் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் மன்ற கூட்டத்தை நடத்திய தலைவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்பு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்று அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்று கவுன்சிலர்களுக்கான முதல் கூட்டம் பெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி முன்னிலையில் பேரூராட்சி தலைவி சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் பேரூராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த காங்கிரஸின் செல்வமேரியை தவிர்த்து மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.
பெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து திமுக நகரச் செயலாளர் சதீஷ்குமாரின் மனைவி சாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கட்சிக்குக் கட்டுப்படாமல் பதவியைக் கைப்பற்றியவர்கள் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை சந்திக்கும்படி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். ஆனால், அதன்படி சாந்தி ராஜினாமா செய்யவில்லை.
இந்நிலையில் முதல் பேரூராட்சி மன்ற கூட்டத்தை நேற்று அவர் நடத்தினார். இதில், பேரூராட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.