Published : 15 Mar 2022 07:55 AM
Last Updated : 15 Mar 2022 07:55 AM
சென்னை: சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் உள்ள 30 உதவியாளர்களிடம் இருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ.5 லட்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எழிலகத்தில் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் துணை போக்குவரத்து ஆணையராக நடராஜன் என்பவர் உள்ளார்.
தலா ரூ.5 லட்சம்..
இவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மதியம் ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிப்புத் துறை (சென்னை நகர சிறப்பு பிரிவு-3) அதிகாரிகள் மற்றும் துணை ஆய்வுக் குழு அலுவலர்களுடன் இணைந்து எழிலகத்தில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், அவர்களது செல்போனும் பெறப்பட்டு அலுவலக அறை முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டது. அதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT