Published : 17 Apr 2016 03:28 PM
Last Updated : 17 Apr 2016 03:28 PM

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

மெட்ரோ ரயில்களில் அதிகளவில் மக்கள் பயணிக்கும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்முயற்சியில் தான் பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மெட்ரோ ரயில் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணிக்க பயணக் கட்டணம் குறைந்த பட்சம் ரூ. 10, அதிகபட்ச கட்டணம் ரூ.40 என நிர்ணயிக்கப்பட்டு, வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணம் அதிகம் எனவும், இதனை குறைக்க வேண்டுமென மக்கள் ஏற்கெனவே கோரிக்கை வைத்தனர். ஆனால், கட்டணம் குறைக்காததால், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் வருவாயை அதிக அளவில் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த மெட்ரோ ரயில் சேவை கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான பயணக் கட்டணத்தை அதிகபட்சம் ரூ.50 ஆக உயர்த்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஏற்கெனவே உள்ள கட்டணமே அதிகம் என நினைக்கின்ற பொது மக்களுக்கு பழைய கட்டணத்தை குறைத்திட நிர்வாகம் முன்வர வேண்டும். மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணக் கட்டணத்தை குறைத்து, பயணிகளின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு ஆலோசனைகளை செய்திட வேண்டும்.

பிற மாநிலங்களில் மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் குறைவாக இருப்பது போல சென்னையிலும் ரயில் பயணக் கட்டணத்தை குறைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயில் சேவையை ஏற்கனவே உள்ள பறக்கும் ரயில், மின்சார ரயில் சேவையுடன் இணைத்திடவும், விரிவுப்படுத்திடவும் வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x