Last Updated : 13 Jun, 2014 01:36 PM

 

Published : 13 Jun 2014 01:36 PM
Last Updated : 13 Jun 2014 01:36 PM

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகள்: அதிகாரிகளை குற்றம்சாட்டும் சமூக ஆர்வலர்கள்

பொள்ளாச்சியில் உள்ள டி.இ.எல்.சி தேவாலய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தனியார் விடுதி ஒன்றில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கோவை கணபதியில் சமீபத்தில் தனியார் விடுதி ஒன்றில் மாணவர் ஒருவரின் உயிரிழப்பைத் தொடர்ந்து தனியார் விடுதிகளை முறையாகக் கண்காணிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அதன் தொடர்ச்சியாக தற்போது பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் வலுக்கட்டாயமாக விடுதியில் இருந்து தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.புனிதா கூறுகையில், விடுதி இயங்கும் போது ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள், விபத்து முடிந்த பிறகு ஆய்வு செய்து, வசதிகள் இல்லை என்று விடுதியை மூட உத்தரவிடுவது அவர்கள் மீதான தவறை மறைக்கிறது.

முறைகேடாக விடுதியை நடத்தியவர்களின் மேல் நடவடிக்கை என்றால், ஆய்வே நடத்தாமல், இப்படி ஒரு விடுதி இருப்பது கூட தெரியாமல் இருக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை என்பதும் கேள்வியாக உள்ளது என்றார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொள்ளாச்சியின் மையப் பகுதியில், பாழடைந்த கட்டிடங்களுக்கு நடுவே பாதுகாப்பே இல்லாத நிலையில் இயங்கி வரும் விடுதிக்கு அங்கீகாரம் பெறவில்லை என்பது விபத்து நடந்த பிறகே தெரியவந்துள்ளது.

ஆனால் விபத்துக்கள் நடைபெற வாய்ப்புள்ளது. காப்பாளர்கள் சரிவர செயல்படுவதில்லை என பல குற்றச்சாட்டுக்களை வைத்து மார்ச் 17ம் தேதி மாவட்ட நிர்வாகத்திற்கும், சமூக நலத்துறைக்கும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அனைத்துக் கட்சி சார்பிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் யாரும் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை விடுதியை ஆய்வு செய்தனர். அவர்களிடம் கேட்டபோது, பெரும்பாலும் மழுப்பலான பதில்களே கிடைத்தன. மூன்று மாதங்களுக்கு முன்பு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும். தாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினர். ஆனால் தவறுக்கு மூல காரணம் என்ன என்பது குறித்து பதில் இல்லை.

ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்:

அனுமதியற்ற முறையில் இயங்கிய விடுதியை நிரந்தரமாக மூடுவது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே:

இந்த விடுதி சிறுவர், சிறுமியர் தங்குவதற்கு ஏற்ற இடம் இல்லை. விடுதியை மூடிவிட்டு அனைவரும் டான்போஸ்கோ அன்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்

சமூக நலத்துறை அதிகாரி செரின் பிலிப்:

விடுதியில் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயா:

மாவட்டத்தில் இருந்த 86 விடுதிகளில், தற்போது 76 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகள் மீது நாங்கள் தீவிர கண்காணிப்பை செலுத்தி வருகிறோம். பிரச்சினைக்குரிய விடுதிக்கு மூன்று மாதங்கள் முன்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இனி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதியின் நிலை

விடுதியின் நிலை குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விடுதி உள்ள வளாகத்தில் தேவாலயம், அலுவலகம், விடுதி மற்றும் காப்பாளர், பாதிரியார்களின் வீடுகள், தனியார் பயிற்சி நிறுவனம் உள்ளிட்டவை உள்ளன. முன்புறமுள்ள பழுதடைந்த கட்டிடங்கள் சமூக விரோதச் செயல்களுக்கு ஏற்ற இடமாகிவிட்டது.

நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளால் அவை இழுபறியில் உள்ளன. இந்த விடுதிக்கு என்று தனியே கேட் கூட இல்லை. மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை, குளியலறை சரியாக இல்லை. திறந்த வெளி கழிப்பிடத்திற்கு அருகே சமயலறை உள்ளது.

விடுதிக்கு நிரந்தரமான ஒரு காவலாளி இல்லை. சிக்னல்களில் போலீஸ் நண்பராக இருப்பவரே காவலாளியாகவும் உள்ளார். அருகே உள்ள விடுதி காப்பாளர்களின் வீடுகள் சிறப்பான முறையில் கட்டப்பட்டு சகல வசதிகளுடன் பராமரிக்கப்படுகிறது. ஆனால் அதனை ஒட்டியுள்ள விடுதி, பாழடைந்த மண்படமாக உள்ளது என்றனர்.

மயக்கமடைந்த சார் ஆட்சியர்

பொள்ளாச்சியில் டி.இ.எல்.சி தேவாலய வளாகத்தில் தங்கியிருந்த விடுதி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இரண்டு பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு பச்சிளங் குழந்தைகள் பிரிவில் இருந்த சிறுமிகளை நேரில் பார்த்து விசாரிப்பதற்காக பொள்ளாச்சி சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரும் அங்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதைக் கேட்டுக்கொண்டிருந்து சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

மருத்துவர்கள் கூறுகையில், காலை முதலே நீண்ட நேரமாக மருத்துவமனையில் இருந்த காரணத்தால் அவர் மயக்கமடைந்தார். அதிலும் சிறுமிகளின் நிலையைக் கேட்டதும் உணர்ச்சிவசப்பட்டிருக்கலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x