மனைவியை கொலை செய்து, மகளையும் கொல்ல முயற்சி: இரு நாட்களாக சடலத்துடன் இருந்தபின் மீனவர் தற்கொலை

மனைவியை கொலை செய்து, மகளையும் கொல்ல முயற்சி: இரு நாட்களாக சடலத்துடன் இருந்தபின் மீனவர் தற்கொலை
Updated on
1 min read

நாகர்கோவிலில் மனைவியைக் கொலை செய்த மீனவர் இரு நாட்களாக வீட்டுக்குள்ளேயே சடலத்தை வைத்திருந்தார். மகளையும் கொலை செய்ய முயன்ற அவர் மனம் மாறி நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜோஸ் கான்பியர் (43). வெளிநாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வனஜா (34). இவர்களுக்கு மஞ்சு (13), அக்சரா (12) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் ஊருக்கு வந்திருந்த ஜோஸ் கான்பியர், நாகர்கோவில் கோட்டாறில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

கடந்த இரு நாட்களாக அவர்கள் யாரும் வெளியே வரவில்லை.வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நேற்று மதியம் கழுத்தில் ரத்தக்காயங்களுடன் கதறி அழுதவாறு சிறுமி மஞ்சு வெளியே ஓடிவந்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். கழுத்து அறுபட்ட நிலையில் வனஜாசடலமாக கிடந்தார். ஜோஸ் கான்பியர் தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார். இளைய மகள் அக்சரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுதுகொண்டிருந்தார்.

கோட்டாறு போலீஸார் அங்கு வந்து கணவன், மனைவியின் சடலத்தை மீட்டனர். கழுத்தில் காயத்துடன் இருந்த மஞ்சு மற்றும் அக்சராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மனைவியை கொலை செய்து விட்டு, ஜோஸ் கான்பியர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. கடந்த 12-ம் தேதி மதியம் ஏற்பட்ட தகராறின்போது வனஜாவை, ஜோஸ் கான்பியர் கொலை செய்துள்ளார். பின்னர், கட்டிலுக்கு அடியில் சடலத்தை மறைத்து வைத்துள்ளார். அன்று மாலை பள்ளியில் இருந்துவந்த இரு மகள்களும் தாயாரை தேடியபோது, கட்டிலுக்கு அடியில் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர். இதனால், ஜோஸ் கான்பியர் இரு மகள்களின் வாயில் துணியை வைத்து, கைகால்களை கட்டியுள்ளார்.

மனைவியின் சடலம், மற்றும்கைகால்கள் கட்டப்பட்ட மகள்களுடன் வீட்டுக்குள்ளேயே கடந்த இருநாட்களாக ஜோஸ் கான்பியர் இருந்துள்ளார். இரு மகள்களையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள நேற்று முடிவெடுத்த அவர், மூத்த மகள் மஞ்சுவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். ரத்தம் கொட்டி மகள் கதறியதால் மனம்மாறி, மகளைவிட்டுவிட்டு தூக்கிட்டு ஜோஸ் கான்பியர் தற்கொலை செய்துள்ளார்.வெகுநேரமாக கைகால்களை அசைத்ததால் மஞ்சுவை கட்டியிருந்த கயிறு அவிழ்ந்துள்ளது. அதன்பின் அவர் வெளியே வந்துள்ளார். தாய், தந்தையரை இழந்தஇரு சிறுமிகளும் அனாதையாக தவித்தது அங்கு கூடியிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. இச்சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in