Published : 15 Mar 2022 11:03 AM
Last Updated : 15 Mar 2022 11:03 AM

தூத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் | போக்குவரத்து பூங்கா, கோளரங்கம் பயன்பாட்டுக்கு வந்தன; ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்கள்

தூத்துக்குடியில் ரூ.57 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, கோளரங்கம் உள்ளிட்டவை நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிடும் நிகழ்ச்சியை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரிமுன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.57.10 கோடி மதிப்பீட்டில் மானுடவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா ஆகியவை ஒரே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களை கடந்த ஜனவரி மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பூங்காக்களில் சிறு,சிறு அடிப்படை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு பூங்கா கொண்டு வரப்பட்டது.

பூங்காக்கள் மற்றும் கோளரங்கத்தை மாநகராட்சி பள்ளிமாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர்ஜெனிட்டா, ஆணையர் தி.சாரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர்பெ.கீதாஜீவன் மாணவ, மாணவியரை வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 4-டி காணொலி, 5.1 ஆடியோ சிஸ்டம்மற்றும் குளிர்சாதன வசதியுடன்கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாணவ, மாணவியருடன் அமைச்சர், மேயர் உள்ளிட்டோர் அமர்ந்து பார்வையிட்டனர். கோள்களை பற்றிய காட்சிகள் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் மட்டுமே விளக்கம் இருப்பதால், மாணவ, மாணவியருக்கு புரியும் வகையில் தமிழில் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

நவீன போக்குவரத்து பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குறியீடுகள் குறித்தும் மாணவ, மாணவியருக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் விளக்கினார். மானுடவியல் பூங்காவில் இந்தியாவில் வாழ்ந்த 12 பூர்வகுடி இன மக்களின் கலாச்சாரம், தொழில்,வாழ்வியல் முறைகளும், ஐந்திணை பூங்காவில் 5 வகை நில அமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றையும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா, நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கம் போன்றவை மாணவ,மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதல் கட்டமாக மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு வாரம் இந்த பூங்காக்களை பார்வையிட ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கோளரங்கத்தை மாலை 5 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் அருண்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x