

வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள சமூக சமத்துவப் படைக் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியும், பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை கோபாலாபுரத்தில் திமுக தலைவரை சந்தித்த சமூக சமத்துவப் படைக் கட்சியின் சிவகாமியும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர்.தனபாலனும் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், புதிய தமிழகம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன. இது தவிர, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாய தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கும் திமுக கூட்டணியில் தலா ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்கள் எவை என்பது குறித்த பட்டியல் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது.
தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) திமுக அணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், உளுந்தூர்பேட்டை, தொண்டாமுத்தூர், நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
மமகவிலிருந்து பிரிந்து மனிதநேய ஜனநாயக கட்சியைத் தொடங்கியுள்ள தமிமுன் அன்சாரிக்கு அதிமுக தரப்பில் நாகப்பட்டினம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சிக்கு ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிப்புத்தூர் (விருதுநகர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்) ஆகிய தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வாணியம்பாடி (வேலூர்), பூம்புகார் (நாகை), கடையநல்லூர் (திருநெல்வேலி), மணப்பாறை (திருச்சி), விழுப்புரம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இன்று சனிக்கிழமை, திமுக கூட்டணியில் உள்ள சமூக சமத்துவப் படைக் கட்சிக்கு தொகுதி பங்கீட்டில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியும், பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.