

தி.மலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கண்ணக்குருக்கை, மேல்கரிய மங்கலம், பிஞ்சூர், மேல் ஆணைமங்கலம், ஆலப்புத்தூர், கொட்டாவூர், அரியப்பாடி, வெட்டியந் தொழுவம், சங்கீதவாடியில் தலா ரூ.20 லட்சத்தில் துணை சுகாதார நிலையம், சந்தவாசல் மற்றும் ஆனந்தல் கிராமத்தில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் என 11 சுகாதார நிலையங்களில் கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நார்த்தாம்பூண்டி, ஆவூரில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டுதவற்கான அடிக்கல் நாட்டு விழா (மொத்தம் ரூ.4.20 கோடி) செங்கம் அருகே கண்ணக்குருக்கை கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். புதிய கட்டிடங்களை திறந்து வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசும்போது, “செங்கம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும் மற்றும் தானிப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணியிடங்களை நிரப்ப அடுத்த நிதியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும். மகப்பேறு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மகப்பேறு மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சுகாதாரத் துறை மேம்படுத்தப்படும். சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.38.50 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான ரோபோட்டிக் கேன்சர் கருவியின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (இன்று) காலை அர்ப்பணிக்கிறார்” என்றார்.
இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களி டம் கூறும்போது, “தமிழக சட்டப் பேரவையில் கடந்த நிதிநிலை அறிக்கையின் போது மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த 110-வது விதியின் கீழ் ஊரக பகுதிகளில் உள்ள 2,400 சுகாதார நிலையங்களை நல்வாழ்வு மையங்களாக ரூ.35.52 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 2,400 சுகாதார நிலையங்கள், நல்வாழ்வு மையங்களாக மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. கரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, எதிர்காலத்தில் ஏற்படும் காலி பணியிடங்களில், அவர்களை நியமிக்க முன்னுரிமை வழங்கப்படும்“ என்றார்.
குடற்புழு நீக்க மாத்திரை
முன்னதாக, தி.மலை நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “தமிழகத்தில் 1 வயது முதல் 19 வயது வரை 2.39 கோடி பேருக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களை தவிர்த்து 20 வயது முதல் 30 வயதுள்ள 54.67 லட்சம் பெண்கள் என மொத்தம் 2.93 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. இதற்காக, ரூ.2.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2007-08-ம் ஆண்டில் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன்பிறகுதான் தேசிய அளவில் ஒரு வாரத்துக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. மாத்திரை உட்கொள்வதன் மூலம் ரத்தசோகை பாதிப்பு தவிர்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒரே மாதிரியான கட்டமைப்பை பொதுப்பணித் துறை அமைச்சர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, பொதுப்பணித் துறை அமைச்சர் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் 59 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுற்றுச்சுவர் கட்டி கொடுக்கப்படும்” என்றார்.
அப்போது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.