Published : 15 Mar 2022 04:15 AM
Last Updated : 15 Mar 2022 04:15 AM

மகள்களுக்கு பாலியல் தொந்தரவு - பக்கத்து வீட்டுக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மூதாட்டி மனு

மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஆட்சியர் காலில் விழுந்து மூதாட்டி கதறினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 255 பொது நல மனுக்களை பெற்றார். பிறகு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனங்களை ஆட்சியர் அமர் குஷ்வாஹா வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கொல்லத்தெருவைச் சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டி அளித்த மனுவில், ‘‘எனக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், எனது 2 மகள்களை மிரட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்கிறார். இது குறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கும், எனது மகள்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாலியல் தொந்தரவு செய்து வரும் நபர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

ஜோலார்பேட்டை அடுத்த பார்ச்சம்பேட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த மனுவில், ‘‘திருந்திய நக்சலைட்டுகள் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள நிலம் ஒதுக்கீடு செய்த தர வேண்டும்’’என குறிப்பிட்டிருந்தார்.

ஜோலார்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சியில் பம்ப் ஆப்ரேட்டர்களாக பணியாற்றி வரும் 6 பேர் அளித்த மனுவில், வேட்டப்பட்டு ஊராட்சியில் பம்ப் ஆப்ரேட்டர்களாக பணியாற்றி வரும் 13 பேருக்கு 13 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு சேர வேண்டிய சம்பள பணத்தை முறையாக வழங்க உத்தரவிட வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், திருப் பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x