Published : 23 Apr 2016 07:32 AM
Last Updated : 23 Apr 2016 07:32 AM

கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரச்சாரம்: துறைமுகம் தொகுதியை முற்றுகையிடும் அரசியல் கட்சிகள்

சென்னை துறைமுகம் தொகுதியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமைச் செயலகம், சென்னை உயர் நீதிமன்றம் என மாநிலத்தின் முக்கிய அதிகார மையங்களும், சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை துறைமுகம் என முக்கிய போக்குவரத்து மையங்களும் இடம்பெற்றுள்ள தொகுதியாக துறைமுகம் தொகுதி விளங்குகிறது. திமுக தலைவர் மு.கருணாநிதி, அக்கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், இதற்கு விஐபி அந்தஸ்துதும் உண்டு.

1 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர்களுடன், சென்னை மாவட்டத்திலேயே மிக குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக இத்தொகுதி விளங்குகிறது. முஸ்லிம்களும், வடமாநிலத்தவர்களும் இங்கு அதிகமாக வசித்து வருகின்றனர்.

அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சீனிவாசன் கொண்டித்தோப்பு அம்மன் கோயில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 தெருக்களில் நேற்று காலை 8 முதல் 11 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தார். வீடு, வீடாகச் சென்ற அவரை வரவேற்ற பொதுமக்கள் பழச்சாறுகள், மோர் போன்றவற்றை கொடுத்து உபசரித்தனர். பிரச்சாரத்துக்கு நடுவே அங்குள்ள தேவி கருமாரியம்மன் கோயிலுக்கு சென்று தொண்டர்களுடன் அம்மனை வழிபட்டார்.

திமுக சார்பில் இத்தொகுதியில் போட்டியிடும் பி.கே.சேகர் பாபு, அக்கட்சியின் சென்னை கிழக்கு மாவட்ட செயலராக இருப்பதால், தனது எல்லைக்கு உட்பட்ட திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதால், அந்த தொகுதியில் சேகர்பாபு, சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே காலை நேரங்களில் மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், மாலை நேரங்களில் மட்டும்தான் துறைமுகம் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். வீடு வீடாகச் சென்று, முந்தைய திமுக அரசின் சாதனைகளைக் கூறியும், திமுக தேர்தல் அறிக்கை குறித்து விளக்கியும் அவர் வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உட்பட பலர் இத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

பாஜக வேட்பாளர் கிருஷ்ண குமார் அதானி, நேற்று பெத்து செட்டி தெரு, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 முதல் 11 மணி வரை வீடு வீடாக சென்று, மத்திய அரசின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரித்தார். பாமக வேட்பாளர் ஆர்.சுரேஷ்குமார், தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

இத்தொகுதியில் மதிமுக வேட்பாளர் முராத் புகாரி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்வர் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x