கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் தமிழக அரசின் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்: வேல்முருகன் கண்டனம்

தி.வேல்முருகன்
தி.வேல்முருகன்
Updated on
1 min read

சென்னை: கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் தமிழக அரசின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, கேரள அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது; தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப்பெரியாறு அணை உபகோட்ட அலுவலகம் மற்றும் பணியாளர் குடியிருப்பு உள்ளது. இங்கு மராமத்துப் பணிகள் செய்ய தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அதன் பிறகே, ஊழியர்கள் தளவாடப் பொருட்களை தமிழ்நாடு அரசு வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, தேக்கடி நுழைவு பகுதியில் உள்ள கேரள வனத்துறை சோதனைச் சாவடியில் அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திய வனத்துறையினர், பெரியார் புலிகள் காப்பக இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தும், அதனை கேரள வனத்துறையினர் ஏற்கவில்லை. கேரளா வனத்துறையினரின் இத்தகையை நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. முல்லைப்பெரியாறு அணை உபகோட்ட அலுவலகம், பணியாளர் குடியிருப்புகள் கேரளாவில் இருந்தாலும், அவை தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்பது வனத்துறையினருக்கு தெரியாதா? தமிழகத்தில் இருந்து வாகனங்களை, சுற்றுலா வரும் பயணிகளை கேரள வனத்துறையினர், சோதனைச் சாவடியில் தணிக்கை செய்யலாம். ஆனால், தேக்கடியில் பணியாளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்ய சென்ற தமிழ்நாடு அரசின் வாகனத்தை நிற்க வைத்து இடையூறு ஏற்படுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஏற்கெனவே, தமிழக அரசு சார்பில் பேபி அணையை வலுப்படுத்த தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்க மறுக்கும் கேரளா அரசு, முல்லைப்பெரியாறு அணையில் தன்னிச்சையாக ஆய்வு மேற்கொள்வது, அணையில் இருந்து தண்ணீர் திறப்பது என கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இச்சூழலில், தேக்கடியில் பணியாளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் செய்ய சென்ற தமிழக அரசின் வாகனத்தை நிற்க வைத்திருப்பது, தமிழக - கேரளா இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவில் பெரும் பாதிப்பையும், பிளவையும் ஏற்படுத்தும்.

எனவே, இவ்விவகாரத்தை கேரளா முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, முல்லைப்பெரியாறு அணை உபகோட்ட அலுவலகம் மற்றும் பணியாளர் குடியிருப்புகளில் பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இனி வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளவும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும் தமிழக அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in